Reviews
வாசகர் ஹாரி
Reviews May 19, 2017
0

கண்டிப்பாக பார்க்க வேண்டிய சினிமா

SEPTEMBER 2014 | வாசகர் ஹாரி

ஒரு லட்சம் டாலர் பட்ஜெட், 52 இடங்களில் காட்சியமைப்பு, 30 பாத்திரங்களின் ஒழுங்கமைப்பு, தினமும் 16 தொடக்கம் 18 மணித்தியாலங்கள் என 14 நாட்கள் மாத்திரமே படப்பிடிப்பு. இப்படி ஒரு ஸ்கேலிற்குள் தரமான ஒரு திரைப்படம் தந்தற்காகவே இயக்குனர் லெனினை ஆயிரம் அழகிய பூக்களை கொடுத்து இலட்சம் முறை பாராட்டலாம்.

தமிழ்சினிமா உலகம் எங்கும் பரந்து விரிந்து தனது ரெக்கைகளை, தோகைகளாக்கி கொண்டு இருக்கின்ற நேரம். இந்த நேரத்தில் தமிழ் சினிமாவின் ஒரு பகுதியாக, ஈழ தயாரிப்பாக நெஞ்சை நிமிர்த்தி வந்து இருக்கின்றது இந்த A GUN AND A RING.

இலங்கையின் தமிழ் கலைஞர்கள் 2000 ரூபாய் டீ-ஷர்ட், 3000 ரூபாய் ஜீன்ஸ் போட்டு கொண்டு கடற்கரையோரம் காதல் பாடல்களை பாடிக்கொண்டு, இந்திய தமிழ் சினிமாவின் பிரபல காட்சி ஒன்றை சுருக்கி குறும்படமாக வெளிக் கொண்டு வரும் இந்த காலத்தில் சொல்ல முடியாத, சொல்ல தயங்கும் சில "தமிழ் உறவுகளின் உணர்வு படிமங்களை" நேர்த்தியாக கொண்டு வந்து இருக்கின்றது இந்த A GUN AND A RING.

ஈழ சினிமாவும் வேண்டிய மாற்றங்களும்

__________________________________________________

ஒன்றை பாராட்டுவதற்க்காய் இன்னொன்றை இகழ்வது என்று அல்ல. சொல்ல போனால் கடந்த வருடம் வெளியான 90% இலங்கை படைப்புக்கள் பார்த்து இருக்கின்றேன்.

"கொய்யால, இது தான்யா எங்க படைப்பு, பாருங்கையா எங்க ஆளு எப்படி கலக்கி இருக்கின்றான்" என்று மார்தட்டி கொள்ள கூடிய படைப்புக்கள் வெகு சொற்பம் தான். ஏன் என் பார்வையில் கூட மகிழ்தரனின் "சூனிய வளையம்" மற்றும் மதிசுதாவின் எளிமையான "மிச்சக்காசு" தவிர்த்து எதுவும் கவரவில்லை ஞாபகமில்லை.

இலங்கை சினிமாவை பொறுத்தவரை கண்களுக்கு அழகான பாடல்கள், படங்கள் எடுப்பது நிச்சயம் தவறு இல்லை. ஆனால் அந்த இடத்தில ஈழ சினிமாவின் தனித்துவம் என்கின்ற ஒன்று மலடாகவே இருக்கும். காரணம் கடந்த 10 ஆண்டுகளாக விஜய்யும், அஜித்தும் அதை தான் செய்கின்றார்கள். இனியும் அதையே செய்வதால் அவர்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. காரணம் அவர்களின் மார்க்கெட் அதில் தான் தங்கி இருக்கின்றது. பாடல்கள் இல்லாத விஜய் படம் ஒன்றை எதிர் காலத்தில் யோசித்து பாருங்கள். நிச்சயம் முடியாது. விஜயின் பாடலுக்கென்றே ஒரு கூட்டம் இருக்கின்றது.

அதை பார்த்து நாம் பாடல் இயற்றுவது தவறொன்றும் கிடையாது தான். வேண்டுமென்றால் அதை ஒரு முயற்சிக்காக, ஒப்பிட்டுக்காக எடுத்து கொள்ளலாம். ஆனால் அதையே அடுத்தடுத்த படைப்பிலும் தொடர்வது தான் தவறு என்று எண்ண தோன்றுகின்றது.

போன முறை கடற்கரையில் ஆடினால் இந்த முறை இன்னொரு பாட்டை போட்டு காருக்கு முன்னால் ஆடுகின்றார்கள். வேறு புதுமைக்களுக்காக யோசிப்பது இல்லை. இது தான் மாற வேண்டும் என்கிறேன்.

இது புது ரூட்டு கண்ணா, புது ரூட்டு

__________________________________________________

மகிழ்தரனின் சூனிய வளையம் பார்க்கும் பொழுது எப்படி ஒரு ஈழ குறும்படத்துறையில் ஒரு பாரிய தாண்டுதலாக தோன்றியதோ அதே போல ஒரு முழு நீள சினிமாவின் மெகா சைஸ் பாய்ச்சலாக A GUN AND A RING தோன்ற தவறவில்லை.

சூது கவ்வும், பிட்சா போன்ற படங்கள் ஒரு திடீர் மாற்றத்தை தமிழ் சினிமாவிற்கு உண்டாக்கி பின்னைய பல முயற்சிகளுக்கு வித்திட்டதோ அதே போல இதை ஒரு நல்ல விதையாக எடுத்து முளைப்பது அவசியம்.

ஒரு துப்பாக்கியும், ஒரு மோதிரமும்

__________________________________________________

இரண்டு வார வேளையில் நடக்கும் 6 வித்தியாசமான கதைகளும், மேலும் ஏகப்பட்ட கிளைக்கதைகளும், கூடவே கதையூடே பயணிக்கும் துப்பாக்கியும், மோதிரமும் கதையிலே உண்டாக்கும் தொடர்பும் தான் இந்த திரைப்படத்தின் அவுட் லைன் எனலாம்.

கதை 1 - டிடெக்ட்டிவும், குழந்தை கடத்தலும்

ஜோன் ஒரு டிடெக்டிவ், அவரது துணையாள் டிடெக்டிவ் பீட்டர். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக ஜார்ஜ் என்கின்ற குழந்தைகள் கடத்தி, புணர்ந்து, கொல்லும் ஒரு காமுகனை ரகசியமாக உளவு பார்த்து வருகின்றார்கள்.

குறிப்பிட்ட அந்த இரு வாரங்களுக்குள் ஜார்ஜிடம் சிக்குகிறாள் "மீனு". கையும் களவுமாக அவர்களை பிடிக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றார்கள். அந்த நாளும் வருகின்றது. ஜார்ஜ் குழந்தையை தனது வேனில் ஏற்றி கொண்டு கிளம்புகின்றான். கையும் களவுமாய் பிடிக்க பின் செல்கின்றவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்து இருக்கின்றது.

கதை 2 - போரில் குடும்பத்தை இழந்த "அபி"யும், போதகர் "அபிட்"டும்

இலங்கை போரில் தனது மொத்த குடும்பத்தையும் இழந்து நிச்சயிக்க பட்ட செந்தில் என்பவனை கரம் பிடிக்க கனடா வருகிறாள் அபி. ஆரம்பத்தில் இருந்தே ஏமாற்றம். பாதிக்க பட்ட இடத்தில் வந்த காரணத்தினாலோ, என்னவோ செந்தில் அவளை ஏற்க ஏர்போட்டிற்கு கூட போகமால் மறுக்கின்றான்.

அங்கிருந்து மீட்க்கப்பட்டு குடும்ப உறவினர்களிடம் போகும் அபிக்கு அவர்களிடமும் ஒரு கட்டத்தில் அவமான பட வேண்டி இருக்கின்றது. தனியாக செல்ல முடிவெடுக்கிறாள். அங்கிருந்து இன்னொரு குடும்ப உறவினர் மூலம் செந்திலை சந்திக்க சந்தர்ப்பம் வேண்டுகிறாள்.

அவள் தங்கி இருக்கும் வீட்டில் ஒரு நண்பனை சந்திக்கிறாள். அவனது பெயர் அபிட். சூடானில் நடக்கும் மனித உரிமை மீறல்களில் தனது குடும்பத்தை இழந்து விட்ட ஒரு போதகர். அபிக்கும், அபிட்டுக்கும் நடக்கும் வார்த்தை பரிமாற்றங்கள் நிச்சயம் சிறப்பிலும் சிறப்பு. மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட காட்சிகள், வசனங்கள்.

கதை 3 - இரும்பனும், இறந்த மகனும், வதை முகாமும்

படத்தின் முதல் காட்சி [டைட்டில் பாடலின் பின்னதாய்]. ஒரு வெள்ளைகார பெண்மணி வேகமாக ஓடி வருகின்றாள். அங்கு ஒரு தற்கொலை. ஒரு இளைஞன் தூக்கில் தொங்கி கொண்டு இருக்கின்றான்.

கலக்கத்திற்குள் நுழைகின்றது குடும்பம். அப்பா அரியம். அமைதியான ஒரு சமையல்காரர். தாய் மகனின் இறப்பை ஜீரணிக்க இயலாமல் விடை தேடி அலைகிறாள்.

படம் இறுதிக்கு கொஞ்சம் நெருங்கும் போது தான் அரியத்தின் அம்பி வேஷம் கலைகிறது. இந்தியாவில் வதை முகாமில் 50 க்கு மேற்பட்ட இளைஞர்களை அடித்தே கொன்றவர். அவரை தேடி வதை முகாமில் இருந்து தப்பிய இளைஞன் வருகின்றான்................. கொலை செய்வதற்கு.

கதை 4 - ஆதியும், முரண் காதலும்

கனடாவில் குடியேறி, உழைத்து முன்னேறிய குடும்பம். மகன் ஆதி. ஓரினத்தான் மேல் ஆசை கொள்கிறான். தந்தைக்கோ பதட்டம். அவரது கண்டிப்பில் ஆதியின் "தோஸ்தானா" தற்கொலை செய்து கொள்கிறான்.

ஏற்கனவே அழுத்தத்தில் இருந்தவனுக்கு நண்பனின் இறப்பு இன்னும் அழுத்ததை உருவாக்கி விடுகின்றது. ஆதிக்கு செவ்வந்தி என்ற பெண்ணை பேசுகின்றாகள். மாப்பிளை, பெண் குடும்பத்தார் பேசும் பொழுது ஆதியையும், செவ்வந்தியையும் தனியாக பேச சொல்லுகின்றார்கள். அங்கே இன்னொரு மாற்றம். செவ்வந்தியும் இந்த திருமணத்தை மறுத்து புதிய ஆலோசனை சொல்கிறாள்.

கதை 5 - ஞானமும், விட்டு போன மனைவியும்

வதை முகாமில் இருந்து தப்பி வந்தவன் ஞானம். தன்னை ஒரு கோழையாகவே எண்ணி கொள்கிறான். ஞானத்தை வெறுக்கும் மனைவி மலர் தனது புதிய காதலனோடு வாழ முடிவெடுக்கிறாள். அங்கு சென்று தகராறு பண்னுகின்றான் ஞானம். அங்கு அவளது காதலனிடம் அடி வாங்கி கொண்டு கையறு நிலையில் அவர்களை துப்பாக்கியால் கொன்று விட முடிவெடுக்கின்றான்.

அப்போது அலெக்ஸ் என்பவனின் கூட்டத்தை துப்பாக்கிகாக தேடி செல்கிறான். அங்கும் அவனது கோழை மனநிலை அவனை ஏமாற வைக்கின்றது. அங்கும் அடி வாங்கி கடற்கரையில் வீச படுகின்றான்.

எழும்பி பார்த்தால் கையருகே ஒரு துப்பாக்கி.

கதை 6 - சொர்ணமும், ஆசை குழந்தையும்

மகளுக்காக வாழ்ந்து வருகிறார் சொர்ணம். குழந்தையை காப்பாற்றி கொள்ள கனடா வந்த தந்தை சொர்ணம். மனைவி சேவை முக்கியமென இலங்கையிலே நின்றவள். வேனில் கடத்தப்பட்டு இறந்து போகிறாள்.

நிற்க

ஆங்கிலத்தில் INTERTWINED ஸ்டோரி முறையில் படமாக்கப்பட்டுள்ளது. அதாவது தெளிவாக சொல்ல போனால் கதை "குறுக்கா மறுக்கா" பயணிக்கும். ஒரு வகையில் "நான்-லீனியர்" முறையில் சொல்ல படுவது. PULP FICTION படம் கூட அந்த வகையில் அமைந்த படம் தான்.

பாத்திரங்களை பொறுத்த வரையில் கதை - 6 இல் உள்ள சொர்ணம் மாத்திரமே மற்றையை 5 கதைகளோடும் ஏதோ ஒரு வகையில் சிறு தொடர்பை வைத்து கொள்கிறார்.

சொர்ணம்

கதை 1 இல் - கடத்தப்படுவது இவரது குழந்தை தான்
கதை 2 இல் - 'அபி'க்கு செந்திலை மாப்பிளை பார்ப்பவர் சொர்ணம் தான்
கதை 3 இல் - 'இரும்பன்' என்னும் அரியம் இவரது பக்கத்துக்கு வீட்டிலே தான் இருக்கிறார் கதை 4 இல் - செவ்வந்தி தரப்பு உறவினராக சில காட்சிகளில் வருகிறார். இதில் தான் கதை 2 இல் வரும் அபியும் ஏர்போட்டில் செவ்வந்தி வீட்டுக்கு வருகிறார்,
கதை 5 இல் - ஞானம், சொர்ணத்தை அண்ணன் என்று அழைக்குமளவுக்கு பழக்கமானவர்

படத்தில் கதையோடு பயணிக்கும் இரண்டு முக்கியாமான விடயங்கள்

1. மோதிரம்
2. துப்பாக்கி

அவை எப்படி பயணிக்கின்றது என்று பார்க்கலாம்.

மோதிரம் செல்லும் பாதை [SPOILERS ஜாக்கிரதை 😉 ]
_________________________________________________

ஆரம்பத்தில் ஞானத்தின் மனைவியால் ஞானத்திடம் விட்டெறியப்படும் மோதிரம் கடைசியில் அபி, அபிட்டிடம் கிளைமாக்சில் வந்தடைகிறது.

கதை 5

முதலாவது - ஞானத்தின் மனைவி மலரிடம் மோதிரம் இருக்கின்றது.

இரண்டாவது - திருமணத்தை முறித்து ஞானத்திடம் எறிகிறாள்.

மூன்றாவது - ஞானம் துப்பாக்கிக்காக மோதிரத்தை அலேக்சிடம் விற்கிறான்

கதை 1

நான்காவது - அலெக்ஸ் அதை நகை கடையொன்றில் விற்கின்றான்.

ஐந்தாவது - டிடெக்டிவ் ஜோன் நகை கடையிலிருந்து மோதிரத்தை காதலிக்காக வாங்குகிறான்.
ஆறாவது - ஒரு தோல்வியின் உச்சத்தில் அதை ஆற்றில் தூக்கி எறிகிறான்.

கதை 2

ஏழாவது - இறுதியில் மோதிரம் அபிட்டை வந்தடைகிறது.

துப்பாக்கி செல்லும் பாதை [SPOILERS ஜாக்கிரதை 😉 ]
__________________________________________________

கதை 1 & கதை 6

வல்லூறை பிரதிபலிக்கும் அந்த துப்பாக்கி ஆரமபத்தில் குழந்தையை கடத்தும் ஜார்ஜ்ஜிடம் இருக்கின்றது.

கதை 5

ஒரு சமயம் ஜார்ஜை விரட்டும் ஜோன், ஜார்ஜை துப்பாக்கியை தூக்கி எறிய சொல்ல அது ஞானத்தின் கைக்கு தவறுதலாக அடைகிறது.

கதை 3

அரியத்தை கொல்ல வரும் ஞானத்திடம் இருந்து துப்பாக்கி அரியத்தால் அடித்து பிடுங்க படுகிறது.

கதை 4

அரியத்திடம் இருந்து "ஆதிக்கு" அவனது தந்தையை கொல்ல கொடுக்கபடுகிறது.

ஹாரி A GUN AND A RING டாப் டென் ரேட்டிங்
_________________________________________

1. லெனின் (இயக்குனர்) 1.0
2. தேனுகா (அபி) 1.0
3. கந்தசாமி கங்காதரன் (அரியம்) 0.9
4. பாஸ்கர் மகேந்திரன் (ஞானம்) 0.8
5. மதிவாசன் (சொர்ணம்) 0.8
6. வசனங்கள் 0.7
7. இசை & டைட்டில் பாடல் 0.7
8. திரைக்கதை 0.7
9. ஒளிப்பதிவு 0.6
10. செல்லி அன்டனி 0.5

ஹாரி ரேட்டிங் - 7.7/10

டாப் 10-3 = 7 அலசல்
__________________

லெனின் - முயற்சி, உழைப்பு அளப்பரியது. ஒட்டு மொத்த தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக எதிர் காலத்தில் உருவெடுப்பார் என்பதில் ஐயமில்லை. இவருடைய இயக்கம் எந்தளவுக்கு பாராட்ட படுகிறதோ அந்தளவுக்கு தயாரிப்பாளரை பாராட்டியே ஆகவேண்டும். ஆனாலும் வியாபார உலகில் தள்ளி வைக்க கூடிய சில விடயங்களும் இல்லாமலில்லை. முதலாவது படத்தின் வேகம். intertwined story என்ற படியால் தப்பித்து இருக்கலாம். ஆனால் நேர்கோட்டு சினிமாவின் போது காட்சி வேகம் அவசியம். [இது குறையில்லை. வியாபார சினிமா நோக்கிற்காக மட்டுமே]. NON - LINEAR ஆக இருந்த போதிலும் மீதி ஐந்து கதைகளிலும் நேர்கோட்டில் பயணிக்கும் கதை (ஆங்காங்கே பிளாஸ்பேக்ஸ் இருந்தாலும்) டிடெக்டிவ் ஜோன் விடயத்தில் மட்டும் ஏன் எக்கு தப்பாக பயணிக்கிறது. ஆரம்பத்தில் மோதிரத்தை தண்ணீரில் எறிகிறார். பின்னர் நகைக்கடையில் மோதிரத்தை வாங்கிய பின்னரே ஆரம்பத்தில் எறிந்த மோதிரம் தான் இந்த மோதிரம் என்று தெரிய வருகிறது. அதே போல சொர்ணத்தின் இரு வேறு சமயங்களில் வரும் குழந்தையை விளையாட அனுமதிக்கும் காட்சி டிடெக்டிவ் ஜோன் விடயத்தில் மாறி வருகிறது. அதாவது பப்பியை ஒரே நேரத்தில் கூடையில் கொண்டு வருகிறார். அதே போல குழந்தையையும் அதே நேரத்திலே தான் வேனில் கடத்துகிறார். (சம்மந்த பட்ட தரப்பில் இருந்து விளக்கம் வந்தால் இந்த வரிகள் நீக்கப்படும்)

தேனுகா - படத்தில் முக்கியமானதொரு நேரத்தில் எல்லாம் கிராப்பை உயர்த்துபவர் அம்மணி தான். அபிட்டோடு வரும் காட்சிகள். இன்னொதொரு அழுகை காட்சி. பிரமாதம் பிரமாதம். வாழ்த்துக்கள் தேனு. இவருடைய கதையிலும் மாபெரும் குறை, மாப்பிள்ளை இவர் கதைத்த அடுத்த நாளே வந்து மன்னிப்பு கேட்டு மனசு மாறி மனைவியாக ஏற்று கொள்ள வருவது. இது என்ன விக்ரமன் படமா சாரே??

கந்தசாமி - படத்தின் அம்பி, அந்நியன் எல்லாம் இவர் தான். வாழ்த்துக்கள்.

பாஸ்கர் - 5 மார்க்ஸ் வாங்க வேண்டிய இடத்தில் எல்லாம் 50 மார்க்ஸ் வாங்க நடித்தவர். DISTINCTION எடுக்க வேண்டிய "கொம்பனை" மிரட்டும் இடத்தில் PASS மார்க்சோடு நிறுத்தி விட்டார்.

வசனங்கள் - ஆங்கிலத்தில், தமிழில் என கலந்து கட்டி வருகிறது. எல்லா நாட்டு ஆங்கில உச்சரிப்பும் அப்படியே பயன்படுத்த பட்டு இருப்பது மகா ஆறுதல். "அபி & அப்பிட்" காட்சிகள் எல்லாம் வசனம் வசீகரிக்கின்றது. ஆனாலும் ஆங்கிலத்தில் "FUCK" என்பதை வசனத்திலும், ஏன் சம்மந்தமில்லாத SUBTITLE லும் சேர்க்க வேண்டிய அவசியம் ஏனுங்க ஜி? அதிலும் இன்னொரு முக்கியமான சீனில் கிருத்திகா (செவ்வந்தி), ஆதியோடு பேசும் காட்சியில் மிகவும் தட்டையாக ஆங்கிலத்தை "RHYME" போல ஒப்புவிக்கிறார். அதில் "FUCK' என்ற வார்த்தையை அடிக்கடி கேட்கும் பொழுது செம மொக்கையாக இருக்கு. ஆனாலும் தியட்டரில் மக்கள் சிரித்த ஒரே காட்சி அந்த பெண்ணின் ஓயாமல் பல்லு தீட்டும் காட்சிக்கு தான்.

இசை - டைட்டில் பாடல் செம, கிட்டார் மாத்திரம் உபயோக படுத்தி இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். சிக்கு புக்கு என்ற படத்தின் இசையமைப்பாளர் தான் இசை. மனிதர் படத்திற்கு தோளாக நின்று தாங்கி இருக்கிறார்.

ஒளிப்பதிவு - படத்திற்கு தேவையான அளவே கமராவும் உழைத்து இருக்கிறது. கவனத்தை வேறு எங்கும் சிதற விடாததே ஆறுதல். FINALLY

இலங்கை சினிமாவின், ஏன் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான படைப்பு. மொத்த டீமிற்கும் முக்கியமாக தயாரிப்பளருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

ஹாரி ரேட்டிங் - 7.7/10

ஹாரி.R