Reviews
ரதன்
Reviews May 19, 2017
0

போருக்குப் பின்னான தமிழ்த் திரைப்படங்கள்

நிழல் | December 2013 | ரதன்

A Gun and Ring (Canada), போராளிக்கு இட்ட பெயர் (பிரான்ஸ்), இனி அவன் (இலங்கை), பிறகு (With you, Without You) (இலங்கை) ஆகிய திரைப்படங்களின் ஊடாக….

போருக்கான படைப்புக்கள் உலகளவில் பிரசித்தமானவை. அமெரிக்கா தனது ஒவ்வொரு யுத்தத்தின் போதும் மக்களை போருக்கான தயாரித்தலுக்கு படைப்பிலக்கியங்களையும் பயன்படுத்துகின்றது. படைப்பிலக்கியங்கள் என்று கூறும்பொழுது இவை கவிதை,சிறுகதை, நாவல் கட்டுரைகளுடன் நின்று விடுவதில்லை. அதற்குள் திரைப்படங்களும் அடங்கும். தொலைக்காட்சி ஒரு செய்திப் பரிமாண வெளிப்பாடாக பிரம்மிப்பதனால் இதற்குள் உள்படுத்துவதில்லை. எனினும் இது இலக்கிய பகுப்பாய்வாளர்களின் விவாதத்துக்கு விட்டுவிடுவதே நல்லது.

முதலாம் உலகப்போர் தொடங்கி அண்மைக்கால ஈராக், சிரியா போர்வரை போரைப்பற்றிய திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்றும் முதலாம், இரண்டாம் உலகப் போரைப்பற்றிய படங்கள் வெளிவருகின்றன. போரைப்பற்றிய திரைப்படங்கள் அதிகளவில் வியட்நாம் போரின் போது பிரபல்யம்பெற்றன. வியட்நாம் போர் பற்றிய குறிப்பிடத்தக்க படங்கள் இவை.

நடந்த முடிந்த ஈழப் போரின் போதும் பல திரைப்படங்கள், குறும் படங்கள் வெளிவந்தன, வந்து கொண்டிருக்கின்றன. சிங்கள, தமிழ் இரண்டு மொழிகளிலும் இப் படங்கள் வெளிவந்தன. சிங்களப் படங்கள் பல இனவாதததை வெளிப்படுத்தியபோதும் சில படங்கள் போரினால் சிங்கள மக்கள் படும் அவலத்தையும், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளன.

போர் முடிந்த பின்னர் பல படைப்புக்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன. இவ்வாறான படைப்புக்கள் பல போரின் அக புற காரணிகளை விமர்சனக்கண்ணோட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளன. முதலாம், இரண்டாம் உலகப்போர் தொடங்கி வியட்நாம் போரூடாக இன்றைய ஈழப் போர்வரை இது தொடர்கின்றது. ஈழப் படைப்புக்கள் பல போரை உடைத்து பகுப்பாய்வு செய்கின்றன. அமெரிக்கா போன்ற வல்லரசுகள் போரின் தோல்வியை இப்படைப்புக்க@டாக வெற்றியாக மக்கள் மனதில் மாற்ற முயல்கின்றன. வியட்நாம் போரின் பின்னர் வெளிவந்த ரம்போ படம் இதற்கு சிறப்பான உதாரணம். மற்றொரு புறம் ஆமெனியா மக்களை படுகொலை செய்த (முள்ளிவாய்க்கால் போன்ற படுகொலைகள்) துருக்கிய அரசை விமர்சித்து கனடிய இயக்குனர் Atom Egoyan ARARAT என்ற படத்தை இயக்கியியிருந்தார். இப் படம் சர்வதேச அளவில் மீண்டும் ஆமேனிய படுகொலைகளை மீள் பார்வை செய்தன. Calendar என்ற படத்தின் தொடர்ச்சியாகவே ARARAT ஐ இயக்கியிருந்தார். இவ்விரு படங்களும் ஆமேனிய படுகொலைகளை கடுமையாக விமர்சித்தன. இன்று வரை ஆமேனிய மக்களிடம் துருக்கிய அரசு மன்னிப்புக் கேட்கவில்லை என்பது Atom Egoyan ன் ஆதங்கம்.

வியட்நாம் போரின் பின்னர் ஒரு புறம் போரின் தோல்வியை மறைக்க ரம்போ போன்ற படங்களை ஹொலிவூட்   வெளியிட்ட போதும் ஒலிவர் ஸ்ரோன் போன்ற இயக்குனர்கள் கடுமையான விமர்சனப் படங்களையும் பதிவு செய்திருந்தனர். இவ்வாறான படங்களில் இராணுவ வீரர்களின் மனோநிலையும் ஒரு இராணுவ வீரனாக அவர்கள் செய்யும் வன்முறையும் பதிவிலிடப்பட்டது. போரின் பின்னரான இவர்களது வாழ்வைப் பற்றியும் பல படங்கள் வெளிவந்துள்ளன. (இதனைப் பற்றிய ஒரு தனிக்கட்டுரை அடுத்த இதழில் இடம் பெறும்) எனவே போர் என்பது கலைப் படைப்புக்களுடாக ஆய்வு செய்யப்படவேண்டும். கட்டுடைக்கப்படவேண்டும். போர் பற்றிய உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். அவ்வகையில் ஈழப் போரும் ஆய்வு செய்யப்படவேண்டும்.

2.

போருக்குப் பின்னர் வெளிவந்த ஈழப் போர் பற்றிய படைப்புக்களில் முக்கியமானவை என்பவற்றில் நான்கு படைப்புக்களை இங்கு விரிவாக பார்ப்பது நல்லது. இவை நான்கில் மூன்று தமிழ்ப் படைப்புக்களாகவும் ஒன்று தமிழ் சிங்கள இரு மொழிப்படமாகவும் உள்ளது. இவற்றுள் ஒன்று ஒரு குறும் படம். பாரிசில் வாழும் புலம் பெயர் தமிழர் “சதா பிரணவன்” ன் “ஒரு போராளிக்கு இட்ட பெயர்” குறும் படம் போருக்கு பின்னான வாழ்வியலை பகுப்பாய்வு செய்கின்றது. The live of others என்ற ஜேர்மனிய படத்தில் 1984ல் Stasi என்ற கிழக்கு ஜேர்மனிய அரச பாதுகாப்பு படை அதிகாரிக்கு Gerd Wiesler (Ulrich Mühe) நாடகராம் எழுத்தாளருமான Georg Dreyman (Sebastian Koch) ஐ உளவு பார்க்கும் Stasi உத்தரவிடுகின்றது. இதன் பின்னர் எழுத்தாளர் பல கடுமையான துயரங்களை அனுபவிக்கின்றார். பேர்லின் சுவரின் வீழ்ச்சியின் பின்னர் முன்னால் கிழக்கு ஜேர்மன் அதிகாரி Gerd Wiesler ஒரு புத்தகக் கடையை கடந்து செல்லும் போது கடையின் கண்ணாடி யன்னலின் ஊடாக ஒரு புத்தகத்தை பார்க்கின்றார். அந்த நுர்லை எழுதியிருப்பவர் இவரால் உளவு பார்க்கப்பட்ட எழுத்தாளர். புத்தகத்தின் முன் பக்கத்தில் புத்தகம் இவருக்காக சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கின்றது. புத்தகத்தை இவர் வாங்கிய போது, கடைக் காசாளர் புத்தகத்தை யாருக்காவது பரிசாக அளிக்கப்போகின்றீர்களா? நான் இதனை பரிசுப் பொதியாகக்குவதா? எனக் கேட்டார் இல்லை அது எனக்கு என இவர் பதிலளித்தார்.

இவ்வாறு போரின் போது அதிகாரிகளாக இருப்போர் போரின் பின்னர் வேறு நிலையில் இவர்களால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டி வரும். இவ்வாறு சந்திக்கும் இருவரைப் பற்றிய குறும் படமே “போராளிக்கு இட்ட பெயர்”. இநதிய பாதுகாப்பு படையின் கால கட்டத்தில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவன் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றான். அவனது ஆண்குறியில் கம்பியால் குத்தப்படுகின்றது. இதனைச் செய்தவர் ஒரு தமிழர். பாதிக்கப்பட்டவர் இன்று பாரிசில் வாழ்கின்றார். தனது நிலையை தாயிடமும் சொல்ல முடியாத அவலம். தாய் திருமணத்துக்காக பெண்களின் படத்தை அனுப்பும் அவற்றை ஒரு ஏக்கத்துடன் பார்ப்பதுடன் வேறு எதுவுமே செய்ய முடியாத நிலையில் உள்ளார். இவரது அண்ணன் எங்கே என்று கேட்டே இவர் சித்திரவih செய்யப்பட்டாhத. ஒரு நாள் சலூனில் முடி வெட்டிக் கொண்டிருக்கும் போது தன்னை சித்திரவதை செய்த தமிழரை கண்டுவிடுகின்றார். முதலில் துவக்கு ஒன்று தேடுகின்றார். இறுதியில் அவர் செல்லும் இடமறிந்து அவரை துரத்திச் சென்று அடித்த போது அவர் கூறுகின்றார் “நானும் ஒரு பலிக்கடா” என்கின்றார்.

தன்னை பாதுகாப்பு அதிகாரிகள் உன்னை அடிக்குமாறு துன்புறுத்தினார்கள். அதனால் தான் செய்தேன் என்றார். பயம் பாதுகாப்பு அதிகாரிகளின் அடிக்குப் பயம். நான் விரும்பிச் செய்யவில்லை. நானும் ஒரு முன்னால் போராளி. என்னை எல்லோரும் துரோகியாகத்தான் பார்க்கின்றார்கள். போராளியாக பார்க்க மறுக்கின்றார்கள். உன்னைப் போல் தான் நானும் பாதிக்கப்பட்டவன். நீ கூறுவது போல் உன் கையால் சாவதை நானும் விரும்புகின்றேன் என்றார்.

நீண்ட காலமாக தனது மனதில் துரோகி என நினைத்த ஒருவன் இன்று தன்னைப் போல் பாதிக்கப்பட்டவன். இலங்கையில் 1983 இனக் கலவரத்தின் போது சிறையில் இருந்த பல தமிழ்க்கைதிகள் சிங்கள கைதிகளால் கொல்லப்பட்டனர். மிகுதிக் கைதிகள் சிலர் மட்டக்களப்பு சிறை உடைப்பில் தப்பி விடுதலை இயக்கங்களில் இணைந்தனர். வேறு சிறைகளில் இருந்தோர் பலர் நீண்ட காலம் சிறைகளில் இருந்தனர். அவ்வாறு சிறையில் இருந்த ஒருவரையே இந்திய இராணுவம் தமிழ்க் கைதிகளைப் சித்திரவதை செய்ய பயன்படுத்தியது. சித்திரவதைக் கூடத்தில் கைகட்டி சித்திரவதையைப் பார்க்கின்றனர் இந்திய இராணுவத்தினர். இக் காட்சி பொதுவாகவே உலக இராணுவங்களின் மனோநிலையை வெளிப்படுத்துகின்றது. ஒரு போராளி எந்த மக்களுக்காக போராடினாரோ அந்த மக்களையே சித்திரவதை செய்கின்றார். அவர் இங்கு பலிக்கடாவாக கட்டாயப்படுத்தப்படுகின்றார். ஆரம்ப காட்சிகளில் இவரும் ஒரு மனோநிலை குழம்பி தனது மனசாட்சிக்கு பயந்து ஒரு குற்ற உணர்வுடன் வாழ்கின்றது காட்டப்படுகின்றது.

இக் குறும்படம் போரின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றது. போராளி-துரோகி, அரச இயந்திரத்தின் கூர்மையான செயல்பாடுகள், பாதிக்கப்பட்டோரின் வாழ்வு, அகதி நிலை, போரினால் ஏற்படுத்தப்படும் மனோநிலை சிக்கல்கள் என பல தளங்களில் படம் பயணிக்கின்றது.இதனை இயக்கியிருப்பவர் சதா பிரணவன். தேடல் அதிகமுள்ள இளைஞர். இக் குறும்படத்தில் பாதிக்கப்பட்ட இளைஞராக இவரே இயல்பாக நடித்திருக்கின்றார்.

முன்னால் போராளியாகவும் பலிக்கடாகவும் பயணிக்கும் இளைஞன் குற்ற உணர்வின் சித்திரவதைகளை தாங்கிக் கொண்டு பயணிக்கின்றார். இந்த ஆழமான பார்வை ஒரு குறும் படத்தில் சிறப்பாக வெளிப்படுவது சிறப்பானது. போரின் பின்னர் வெளிவந்த முக்கிய குறும்படங்களில் குறிப்பிடத்தக்கது இப்படம். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கிய “ஏன்” என்ற படமும் போரினை மீள் ஆய்வு செய்யும் மற்றொரு குறும்படம்.

A Gun and A Ring

மேற்குறிப்பிட்ட படத்தின் இயக்குனர் லெனின் சிவம். இது இவரது மூன்றாவது படம். இவரது இரண்;டாவது படமான 1999 வன்கூவர் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது. இப் படம் இதுவரை மூன்று சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விட்டது.
தமிழ்;ப் படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படுவது என்பது மிகவும் குறைந்தே காணப்படுகின்றது. இந் நிலையில் புலம் பெயர் திரைப்படங்களும் குறும் படங்களும் சர்வதேச திரைப்படவிழாக்களில் பரவலாக திரையிடப்படுகின்றன. 2008ல் Chris Chong Chan Fui இயக்கிய Block B என்ற தமிழ்க் குறும்படம் ரொரண்ரோ சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த குறும்படத்துக்கான விருதைப் பெற்றது. இப் படம் மலேசியாவில் படமாக்கப்பட்டது.
A Gun and A Ring படமும் சங்காய் திரைப்படவிழாவில் சிறந்த படத்துக்கான இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியிருந்தது.லெனின் நல்ல படங்களை எடுக்க வேண்டும் என்ற தேடல் சேரன், அகிலன், கங்கா, மயு மனோ போன்ற படைப்பாளிகளையும் இப் படத்தில் இணைத்துள்ளது. மாற்று சினிமா பற்றி பேசுபவர்கள் கூட்டு முயற்சி பற்றி கூறுவார்கள்.

 

அப்படியான ஒரு கூட்டு முயற்சியே இப் படம் என லெனின் தெரிவித்தார். 14 நாட்களில் 100000 டொலர்களில் (இன்றைய மதிப்பின் படி 60லட்சம் இந்திய ரூபாய்கள்) இப் படத்தை தயாரித்துள்ளார்கள். Post Production க்கு மட்டும் 35ஆயிரம் டொலர்கள் செலவளித்துள்ளார்கள். இப் படத்தில் நடித்த ஒரு நடிகருக்கு மாத்திரமே ஒரு நாளைக்கு 150 டொலர் படி நான்கு நாட்களுக்கு 600 டொலர்கள் கொடுக்கப்பட்டது. அனைத்து சகல நடிகர்களும் இலவசமாகவே நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளரும் பணம் எதுவும் வாங்கவில்லை. இவ்வாறான கூட்டு முயற்சியே இப் படத்தை சங்காய், மொன்றியல் போன்ற சர்வதேச திரைப்படவிழாவிற்கு கொண்டு சென்றுள்ளது.

ஒரு காலத்தில் ஈழப் போரில் பங்குபற்றிய முன்னால் போராளி இன்று குடும்பத்துடன் ரொரண்ரோவில் வாழ்கின்றார். இவர்களது மகன் ஒரு பாலியலாளர். இவர் தற்கொலை செய்து கொள்கின்றார். இப் போராளியால் பாதிக்கப்பட்ட இளைஞன். ஊருக்கு நல்லது செய்யும் ஒரு புலம் பெயர் சமூக முக்கியஸ்தர். இவரது மனைவி ஈழத்தில். இவர்களது சிறு மகள். இச் சிறுமகள் பங்காவிற்கு வரும் பொழுது அச் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ய விரும்பும் வெள்ளை இனத்தவர். போரால் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் எனக் கூறி ஒரு பெண்ணை ஊரில் இருந்து அழைத்து அப் பெண் விமான நிலையம் வந்த போது அவளை சென்று கூட்டி வராத மற்றொரு புரட்சி இளைஞன். இப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்துவிட்டு தனது மகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க முயலும் பெண். வெள்ளை இனத்தவன் சிறுமியை கடத்த முயல்கின்றான் எனத் தெரிந்தும் தான் சாதனை செய்வதற்காக சந்தர்ப்த்துக்காக காத்திருக்கும் பொலிஸ் அதிகாரி. அதனால் அச் சிறுமி வெள்ளை இனத்தவனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாகி கொலையும் செய்ய்ப்படுகின்றாள்.

போரால் பாதிக்கப்பட்டு Shelter எனப்படும் பாதிக்கப்பட்டவர்களின் தங்குமிடத்தில் தங்கியிருக்கும் சூடான் நாட்டு இளைஞன். இவர்களின் வாழ்வியல் சம்பவங்களை வெளிப்படுத்துவதே இப் படம். ஏதோவொரு சங்கிலி போல் இவர்களுக்குள் இணைப்பு ஏற்படுகின்றது.

முன்னால் போராளியின் நடவடிக்கைகள் கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவலை நினைவு படுத்துகின்றது. போராளியாக கங்கா இயல்பாக நடித்துன்னார். போராளியாக துப்பாக்கியுடன் பயணிப்பவன் தனது இயல்பு நிலைக்கு மாற பல காலம் செல்லும். இங்கு மனைவி மகன் என இயல்பு நிலைக்கு மாறி சில காலங்கள் வாழ்ந்த பின்னரும் அடி மனதில் இவரது வன்முறை வாழ்வு இவரை விட்டுச் செல்லவில்லை. லெனின் இதனை ஒரு தனது மனச்சாட்சியின் வெளிப்பாடாக ஒரு தமிழ்ப் போராளியின் உள உளைச்சலின் பாதிப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இங்கு ஒரு கேள்வி எழுகின்றது. சிங்கள இராணுவ வீரர்களின் நிலை என்ன? இவர்களிடமும் இந்த உளவியல் தாக்கங்கள் இருக்கும். இவர்கள் நாளை இயல்பு நிலைக்கு மாறி சமூகத்தில் வாழமுடியுமா? இதனை லெனின் கேள்வியாக கூறவில்லையாயினும் இப் பாத்திரத்தின் பன்முக பரிமாணமாக வெளிப்படுகின்றது. இன்று தமிழ்ப் பிரதேசங்களை சுற்று நிற்கும் இராணுவத்தின் மீதும் இக் கேள்வி எழுகின்றது.

நீண்ட காலமாக உலகம் இவ்வாறான கேள்விக்கு விடை தேட முயற்சிக்கின்றது. அமெரிக்க இராணுவ வீரர்களின் போரின் பின்னால் உள்ள வாழ்வின் கொடூரங்களை பல படங்கள் பதிவு செய்துள்ளன.

போரால் பாதிக்கப்பட்டு கனடா வரும் பெண்ணும் அப் பெண் தங்கியிருக்கும் (Shelter) இல்லத்தில் தங்கியிருக்கும் சூடான் இளைஞருக்குமிடையில் நட்பு ஏற்படுகின்றது. இது இறுதியில் இவர்களை இணைக்கவும் செய்கின்றது. போர் என்பது உலகில் சகலருக்கும் ஒன்றே. உயிர் இழப்பில் தொடங்கி அகதி என ஓடி வாழ்வு ஆட்டம் காண்கின்றது. மிகப் பெரிய அளவில் உயிர் இழப்புக்களை கண்ட நாடுகளில் சூடானுக்கும் முக்கிய இடமுண்டு. இதே போல் தமிழ் மக்களும் பலஆயிரம் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் இருவரையும் ஒரே கோட்டில் இணைத்து இயல்பாக போரின் வலியை வெளிப்படுத்தியுள்ளார். இது நட்பாகவும் ஒரு ஆதரவாகவும் இருக்கலாம். ஆனால் இது திருமணத்தில் தான் முடிய வேண்டும் ஏன் நினைக்க வேண்டும்?

 

இப் படமும் பல தளங்களில் பயணிக்கின்றது. புலம் பெயர் வாழ்வு, பாலியல் தேர்வுகளை ஏற்றுக் கொள்ள மறுக்கும் இறுக்கமான கட்டமைப்புக் கொண்டுள்ள சமூகங்களால் ஏற்படும் விளைவுகள் ;இழப்புக்கள’ , ஒரு பாலியிலாளரை ஏற்றுக் கொள்ள மறுக்கும் புலம் பெயர் தமிழ்ச் சமூகம், அதிகாரிகளின் துஸ்பிரயோகங்கள், போராளியாக துப்பாக்கியுடன் வாழ்ந்து பலரை சுட்டுவிட்டு, ஒரு இயல்பு வாழ்வுக்கு வாழும் போராளியின் மனோநிலை, போரினால் பாதிக்கப்பட்டோர், போர் ஏற்படுத்தியுள்ள மனோநிலைச் சிக்கல்கள், குற்ற உணர்வுகள், அகவலிகள் போன்ற தளங்களில் தனது விமர்சனப் பார்வையை இப் படம் முன்வைக்கின்றது.

வன்முறைக்கு எதிராக தனது குரலை சில பாத்திரங்களுக்கூடாக வெளிப்படுத்தும் லெனின் வேறு சில பாத்திரங்களுக்கூடாக வன்முறைக்கு சார்பாக மாறுவது இப் படத்தின் முரணாகும். பல்கலைக் கழக படிப்புக்கு விரும்பும் பெண்ணை திருமணத்துக்கு வற்புறுத்தும் தாயை கொல்ல வேண்டும் என கூறும் மகள், தன்னை திருமணத்துக்கு வற்புறுத்தும் தந்தையைக் கொல்ல துப்பாக்கி பெறும் மகன் போன்றவர்களின் மனோநிலையை லெனின் இன்னமும் கடுமையாக விமர்சித்திருக்கலாம்.;..

லெனின் இப்படம் போருக்குப் பின்னரான படைப்புக்களில் ஒரு முக்கியமான பதிவு. பிண்ணனி இசை, ஒளிப்பதிவு, நடிகர் தேர்வு போள்றவற்றில் அதிக கவனம் செலுத்தினால் இப் படம் பிரதான திரைப்பட விழாக்களை சென்றடைந்திருக்கும். தமிழுக்கு லெனின் இப் படம் ஒரு புதிய விடயத்தை முன்வைத்துள்ளது. இதுவரை எவரும் முன்வைக்காத விடயங்களை பதிவு செய்துள்ளது. இனி வரும் காலங்களில் புலம் பெயர் படங்கள் தமிழை சர்வதேச திரைப்படவிழாக்களில் பிரதிநித்துவம் செய்யும் என்பதற்கு இப் படம் ஒரு சான்று.

3.

சிங்களப் படங்கள்

இலங்கை இனப் பிரச்சினையை மையமாகக் கொண்டு பல சிங்களத் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. பிரசன்னா விதானகே “Ira Madiyama”(August Sun)(2003), Pura Handa Kaluwara (Death on A Full moon day)(1997), With you, with out you (2013) ஆகிய போர் பற்றிய படங்களை இயக்கியுள்ளார். விமுக்தி ஜயசுந்தர Forshaken Land என்ற படத்தை இயக்கியுள்ளார். அசோக ஹங்கம Me Maga Sandai (This is my moon) மற்றும் இனி அவன் ஆகிய படங்களை இயக்கியுள்ளனர். மேற்குறிப்பிட்ட மூவரும் ஓரளவிற்கு சமநிலையில் இனப்பிரச்சினையை வெளிப்படுத்த முயற்சித்துள்ளனர். இவர்களை விட வேறும் சில சிங்கள இயக்குனர்கள் இனப் பிரச்சினையை நியாயப+ர்வமாக தமது படைப்புக்களில் அணுகியுள்ளனர்.

சிங்கள திரைப்பட உலகின் முண்ணனி இயக்குனர் தர்மசேன பத்திராஜா SOLDADU UNNAHE (The Old Soldier) என்ற படத்தை இயக்கியிருந்தார். இப் படம் 1981ல் வெளிவந்தது. இப் படத்திலும் இராணுவ வீரர்கள் ஒரு சடப் பொருளை ஒத்தவர்கள். அதிகாரத்துக்காக அடிமையாக உழைப்பவர்கள் என தர்மசேனா பத்திராஜா குற்றஞ்சாட்டியிருந்தார். இனப் பிரச்சினையின் ஆரம்ப உச்சக் கட்ட காலப்பகுதியில் இப் படம் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காமினி பொன்சேகாவின் இரு மொழிப்படமான சருங்கலே மற்றும் நொமியன மினிசுன் போன்ற படங்களில் தமிழ் மக்களின் மீதான இன வெறியை விமர்சித்துள்ளார். இதில் சருங்கலே யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டி பிரதேசத்தில் படமாக்கப்பட்டுள்ளது. காமினி பொன்சேகா இலங்கையில் , தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் க்கு உள்ள செல்வாக்கு போன்று பலமான ரசிகர்களின் ஆதரவு பெற்றவர். பின்னாற்களில் வட-கிழக்கு மாகாணத்தின் கவர்னராகவும் கடமையாற்றியுள்ளார்.

சோமரட்டண திசநாயக்காவின் சரோஜா, குட்டித் தேவதை (Punchi Suranganavi) ஆகிய இரு மொழிப் படங்களை (தமிழ்-சிங்கள) இயக்கியுள்ளார். இவை பற்;றிய எதிர் விமர்சனங்கள் அதிகளவில் உள்ளன.

இவற்றை விட வெளிவந்த பெரும்பாலான சிங்களப் படங்கள் இனவாதத்தையே கக்கின. இவற்றைப் பற்றி தனியொரு கட்டுரையில் பார்ப்பது நல்லது.

4.

இனி அவன்

ஈழப் போரின் பின்னர் வெளிவந்த திரைப்படம் இனி அவன். இதனை இயக்கியிருப்பவர் அசோக ஹங்கம. ஏற்கனவே பல தேசிய இனப்பிரச்சினை பற்றிய படங்களை ஏற்கனவே இயக்கியுள்ளார். இவர் போரைப் பற்றி கூறிய விடயம் இங்கு முக்கியமானது. “யுத்தத்தில் இராணுவத்தின் தியாகம் என்பதும் தேசத்துக்காக நாட்டு மக்களுக்காக என்று கூறப்படுபவையும் வெறும் அரசியல் கோசங்கள். வேறு தொழில் இல்லாமையினால் வாழ்க்கையை கொண்டு நடாத்தவே இராணுவத்தில் சேர்கின்றனர்”.

இவரது Me Maga Sandai (This is my moon) என்ற படத்தில் போரின்போது இராணுவச் சிப்பாயிடம் தமிழ்ப் பெண் சென்றடைகிறாள் . சிப்பாய் இவளைக் கண்டதும் சுட முயற்சிக்கிறான். அவள் தனது சங்கிலியைக் கழற்றுகிறாள். ஆனால் அவன் குறி வைப்பதில் இருந்து விலகவில்லை. அடுத்து பாவாடையைத் தூக்குகிறாள். முகத்தை மூடிக் கொள்கிறாள். அவன் புணர்கிறான். அவனைத் தொடர்ந்து அவளும் கிராமத்துக்குச் செல்கிறாள். இவளது வருகை அவனது முறைப் பெண்ணுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. கிராமத்தில் சிப்பாயின் அண்ணன்இ மாணவன் போன்றோரால் அவள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகிறாள். இறுதியாக அருகில் உள்ள பௌத்த விகாரையில் தஞ்சம் அடைகிறாள். மறுநாள் காவியுடையை அநாதரவாக விட்டுவிட்டு பிக்கு காணாமல் போய்விடுகிறார்;. இறுதியில் இப் பெண்ணுக்கு பிறக்கும் பிள்ளையை கைகளில் ஏந்தி ;இது என் நிலா என்கிறான்

இப் படத்தில் இவர் முன்வைத்துள்ள கருத்துக்களும், இராணுவத்தின் கொடுமையான வன்முறைகள் மீதாக இவர் எழுப்பும் உளவியல் சமாதானக் குரல்களும் கடுமையான விமர்சிக்கப்படவேண்டியவை. இறுதியில் இராணுவச் சிப்பாய் கைகளில் ஏந்தி “இது என் நிலா” என்பது பல கேள்விகளை இவர் மீது எழுப்பியது.

அசோக ஹங்கம போரின் போதும் பின்னரும் வட-கிழக்கிற்கு பல தடவைகள் சென்று வந்துள்ளார். போரின் பின்னர் இவர் வடக்கிற்கு சென்ற போது முன்னால் போராளி ஒருவர் சாரதி பத்திரம் பெறுவதற்கு இருபதாயிரம் ரூபாய்கள் இன்றி அவலப்பட்டதைக் கண்டுள்ளார். இப் போராளியால் நன்றாக வாகனங்களை ஓட்ட முடியும். இங்கு இருபதாயிரம் என்பது லஞ்சம் உட்பட செலுத்த வேண்டிய பணத்தையே குறிக்கின்றது. இவ்வாறான உண்மைச் சம்பவங்களே இனி அவன் என்ற படத்தை தன்னை எடுக்க தூண்டியதாக செவ்வி ஒன்றில் அசோக குறிப்பிட்டுள்ளார்.

இனி அவன் முற்று முழுதாக யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இப் படம் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதலாவது பகுதியில் ஒரு முன்னால் போராளி யாழ்ப்பாணத்திற்கு திரும்புகின்றார். அதன் பின்னர் இவரை யாழ் சமூகம் எவ்வாறு பார்க்கின்றது. இவர் அச் சமூகத்தை எவ்வாறு எதிர் கொள்கின்றார் என்பதே முதல் பகுதி. இதன் பின்னர் இவர் ஒரு நகைக் கடையொன்றில் வேலை பார்க்கின்றார். அங்கு இவர் எதிர் கொள்ளும் சம்பவங்கள் இரண்டாம் பகுதியாக உள்ளது. இரண்டாம் பகுதி போரின் பின்னால் எழுந்துள்ள சட்டப+ர்வமற்ற செயற்பாடுகளை விமர்சிக்கின்றது. இதற்கு இப் போராளி பலியாகின்றான். இது ஒரு மாபியா போன்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதனை மாற்றாவிடின் ஒரு முன் அரசியல் தீர்வு சாத்தியமற்றது என்பது அசோக ஹங்கமவின் கருத்து;. இச் சம்பவங்கள் நடைபெறும் களம் 24 மணிநேரமும் இராணுவமயமாக்கப்பட்டுள்ள பிரதேசம். இச் சம்பவங்களுக்கும் அரச இயந்திரங்களுக்குமான தொடர்பு என்ன? அவர்கள் தான் இந்த மாபியா சூழலை உருவாக்கியுள்ளார்களா? அசோக ஹங்கம தெளிவாக வெளிப்படுத்தத் தவறிவிட்டார். மருந்துக்கு கூட இராணுவத்தை இப் படத்தில் காணவில்லை. இதற்கிடையில் இந்த மாபியாவுக்குள் புலம் பெயர் தமிழனும் உள்ளதாக காட்டுகின்றார். ரொரண்ரோவில் நடைபெற்ற திரையிடலுக்குப் பின்னரான கேள்வி ஒன்று பதிலளித்த அசோக இச் சூழலுக்கு ஆளும் கட்சி ஆதரவாளர்களை காரணம் என மறைமுகமாக கூறினார். இதனை படத்தில் வெளிப்படுத்த தவறிவிட்டார்.

முதலாவது பகுதியில் யாழ் சமூகம் அசோக ஹங்கமவினால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றது.; முன்னால் போராளிகள் போராளிகளாக இருந்த போது அவர்களின் செய்த செயற்பாடுகளை யாழ் சமூகத்தின் ஊடாக விமர்சிக்கின்றார்.

புனர்வாழ்வு பெற்ற போராளிகள் இப் படம் படமாக்கப்பட்ட காலத்தில் சுதந்திரமாக நடமாடக் கூடிய சூழல் இருந்ததா? இயல்புக்கு மாறான நிலையிலேயே படத்தின் தளம் உள்ளது. யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு அசைவும் உளவு பார்த்தபடியே உள்ளது. இது போன்ற சூழல் முன்னர் கிழக்கு ஜேர்மனி, சோவியத் ய+னியன் போன்ற பிரதேசங்களில் காணப்பட்டுள்ளது. இன்று அமெரிக்காவிலும் ஒவ்வொரு பிரசையும் கண்காணிக்கப்படுகின்றார்.

இவர் இப்படத்தில் முன்வைக்கப்படும் கருத்தியலில் ஒரு பக்க சார்பு இருப்பதாகவே படுகின்றது. பல காட்சிகளுக்கு பொதுவாக நடைபெறாதவற்றையே படமாக்கியுள்ளார். சிங்கள மக்களை தமிழ் மக்கள் சார்ந்திருக்க வேண்டும் என்ற கருப் பொருள் இவரது “இது என் நிலா” படத்தைப் போன்று இப் படத்திலும் வெளிப்படுகின்றது. அண்மையில் நடைபெற்ற வடமாகாண தேர்தலில் முன்னால் போராளி ஒருவரின் மனைவி அதிகளவு வாக்குகளைப் பெற்றுள்ளார். இது அசோக ஹங்கமவின் கருத்து எதிராகவே உள்ளது.

இவர் இப் படத்தை தமிழிலேயே எடுத்துள்ளார். ஏன்? என்ற கேள்வி எழுகின்றது. மீண்டும் ஒரு போர் வரக் கூடாது என்பதில் அசோக தெளிவாக உள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினையை அசோக ஹங்கம புரிந்து கொள்ளவில்லை. அவர்களது உணர்வுகளை அறியவில்லை. தனது மனச்சாட்சியையும் இவர் தட்டியெழுப்ப தவறிவிட்டார்.

அசோக ஹங்கம இப் படத்தை இலங்கையின் பல பாகங்களில் திரையிட்டு கலந்துரையாடலில் நேரடியாக ஈடுபட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இப் படம் ஒரு சிறந்த கலைஞனின் மனச்சாட்சியாக இல்லை என்பது வருத்தத்தையளிக்கின்றது.

 

5.

With You, With out you

அடகுக் கடை வைத்திருக்கும் ஒரு சிங்களவருக்கு அக் கடைக்கு அடிக்கடி வரும் ஒரு தமிழ்ப் பெண் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகின்றது. அப் பெண்ணிற்கு அப் பெண்ணின் உறவினர்கள் வயது முதிர்ந்தவரை திருமணம் செய்து வைக்கப்போகின்றார்கள் என அறிந்து இவர் அப் பெண்ணை திருமணம் செய்து கொள்கின்றார். இவர்களின் திருமணத்தின் பின்னர் ஒரு நாள் அடைவுக்கடைக்காரரின் நண்பர் இவர்களது வீட்டில் வந்து தங்குகின்றார். நண்பர் மூலம் அடைவுக் கடைக்காரரின் முன்னால் வாழ்வு தெரியவருகின்றது. இவர் முன்னர் இராணுவத்தில் வேலை பார்த்தவர் என்பது தெரியவருகின்றது. இது இவரது தமிழ் மனைவிற்கு அதிர்ச்சியளிக்கின்றது. இத் தமிழ்ப் பெண்ணிள் குடும்பம் இராணுவத்தால் சிதைக்கப்பட்டுள்ளது. அனைவரும் கொல்லப்படுகின்றனர். இப்பொழுது இப் பெண்ணிற்கு உளச்சிக்கல். தனது குடும்பத்தைக் கொன்றவருடன் எப்படி வாழ்வது என்பது அவளின் கேள்வி. தனது அடைவுக் கடையை ஒரு முஸ்லீம் வர்த்தகரிடம் விற்று விட்டு மனiவியின் விருப்பமான இந்தியாவிற்கு செல்லலை நிறைவேற்ற முயற்சிக்கின்றார். பணத்துடன் வரும் இவரிற்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று காத்திருக்கின்றது. இவரது மளைவி தற்கொலை செய்து கொள்கின்றார்.

“A Gentle Creature” by Fyodor Dostoyevsky என்ற சிறுகதையை மையமாகக் கொண்டே இப் படத்தை பிரசன்னா உருவாக்கியுள்ளார். இப் படத்தில் தமிழ்ப் பெண்ணாக மராத்திய நாடகரான அஞ்சலி பட்டீல் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். இவர் சில ஹந்தி படங்களிலும் நடித்துள்ளார். முன்னால் இராணுவ வீரனாக இயல்பாக நடித்துள்ள சியாம் பெனான்டோவும் ஒரு நாடகராவார்.

இப் படத்தை ரொரண்ரோவில் சிறப்புக் காட்சியாக மார்க்கம் யோர்க் அரங்கில் சுயாதீன திரைப்படக் கழகம் திரையிட்டிருந்தது. இதன் பின்னர் பிரசன்னாவுடனான கலந்துரையாடலும் இடம் பெற்றிருந்தது. எனது சிங்கள இனத்தின் கொடுமைகளுக்கு எதிராக எனது மனச்சாட்சியை பதிவு செய்துள்ளேன் என பிரசன்னா கலந்துரையாடலில் தெரிவித்தார். இறுதியில் தமிழ் மனைவி தற்கொலை செய்வது சிங்கள அரசு தமிழ் மக்களையும் அவர்களது உரிமைகளையும் கொலை செய்து விட்டது என்பதையே காட்டுகின்றது. தமிழ் மக்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படவேண்டும். இல்லேயேல் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை என்பதையும் இப் படம் தெளிவாக குறிப்பிடுகின்றது. படத்தின் இறுதியில் இவரது அடவுக் கடையை ஒரு முஸ்லீம் வர்த்தகர் வாங்குகின்றார். இன்று இலங்கையில் முஸ்லீம்கள் தொடர்ச்சியாக வர்த்தகரீதியில் பலமானவர்களாக மாறுகின்றனர். 1915ல் சிங்கள முஸ்லீம் இனக்கலவரம் ஏற்பட்டது. படத்தில் காட்டப்படும் சம்பவம் சாதாரணமானதாகவும் இயல்பானதாகவும் இருக்கலாம். ஆனால் அடுத்த கட்டத்துக்கான எச்சரிக்கை ஒன்றையும் இங்கு பிரசன்னா பதிவு செய்ய தவறவில்லை. ஒரு கலைஞனாக கடந்த கால துயரங்களையும் கொடூரங்களையும் நிகழ்கால யதார்த்தத்தையும் எதிர்கால நடைபெறப் போகும் விளைவுகளையும் அவர் இங்கு பதிவு செய்கின்றார். பிரசன்ன தனது ஆவணிவெய்யில் படத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றத்தை விமர்சிக்கின்றார். இவர் ஒரு நேர்மையான படைப்பாளியாகவே செயல்பட்டுவருகின்றார்.

பொதுவாகவே பிரசன்னாவின் படங்களில் போர்க் காட்சிகள் இடம் பெறாது. ஆனால் போர்ச் சூழலின் கோர முகங்கள் இப் படங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இவரது அனைத்துப் படங்களிலும் குற்ற உணர்வு ஒரு பாத்திரமாக மையமாக இருக்கும். இப் படத்தையும் ஒரு குற்ற உணர்வுடனேயே இவர் படமாக்கியுள்ளார். இவரது ஒவ்வொரு படத்திலும் நிறம் மாறுபட்டிருக்கும். ஆவணி வெய்யிலில் படம் முழுவதும் மதிய நேரம் கடும் வெயில் அனல் கொதிப்பது தெரியும். போரின் அகோரத்தை வெளிப்படுத்துகின்றது இந் நிறம் மற்றும் சூழல். இப் படம் ஒரு சில காட்சிகளை தவிர அனைத்துக் காட்சிகளும் இருளான பொழுதிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இது போர் முடிந்தும் இன்னமும் விடிவு பிறக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது. இருள் சூழ்ந்த மனத்துடனேயே தமிழ் மக்கள் உள்ளார்கள் என்பதகை; குறிக்கின்றது. இயற்கை ஒளியின் ஊடாகவே சூழல் அனர்த்தங்களையும் மனோநிலையையும் வெளிப்படுத்துகின்றார். இவரது படங்களின் பிண்ணனி இசையும் சூழலின் நிறங்களை வெளிப்படுத்தும்.

முன்னால் இராணுவ வீரன் தேர்ந்து எடுக்கும் தொழில் மனச்சாட்சியற்ற அடவு வைக்கும் கடை. கடின மனம் கொண்டவர்களாலேயே இத் தொழில் செய்ய முடியும். இது பிரசன்னா இராணுவ வீரர்கள் மீது தொடர்ச்சியா முன்வைக்கும் விமர்சனமாகும்.

பிரசன்னா தமிழ் மக்களுக்கு உரிய முறையான தீர்வு வழங்கப்பட்ட பின்னரே சேர்ந்து வாழ்தல் சாத்தியம் என்கின்றார். அசோக ஹங்கம முரண் நிலையில் தமிழ் மக்கள் சிங்கள மக்களை சார்ந்திருத்தல் அவசியம் என்கின்றார். இங்கு அசோக ஹங்கம ஒரு பக்க சார்பு நிலையிலேயே தனது பதிவை முன்வைக்கின்றார். இதனை ஒரு மேலாதிக்க பார்வை என்று கூட கூறலாம். பிரசன்னா போர்ச் சூழலில் இருந்து சற்று விலகி உள்ள பிரதேசத்தில் தனது படத்தை உருவாக்கி போரின் கோரங்களை வெளிப்படுத்துகின்றார். அசோக ஹங்கம இராணுவம் 24மணி நேரமும் பிரதேசம் முழுவதும் பரவியிருக்கும் பிரதேசத்தில் தனது படத்தினை படமாக்கியுள்ளார். களமும் அங்கு தான் உள்ளது. ஆனால் மருந்துக் கூட ஒரு இராணுவத்தையும் காணவில்லை. அதன் அழுத்தங்கiயும் முகங்களையும் கூட படத்தினூடாக பெறமுடியவில்லை.

இங்கு சிலியில் 1973ல் அப்போதைய அதிபர் Salvador Allende கொடுமைகளை Post Mortem என்ற படம் பதிவு செய்திருந்தது. ஒரு பிரேத பரிசோதனை இடம் சிலியின் அரச கொடுமைகளை இயல்பாக வெளிப்படுத்தியிருந்தது. தற்செயலாக ஒருவர் உயிரோடு அங்கு கொண்டுவரப்பட்டாலும் அவர் இறக்கப்படவேண்டும். இவ்வாறான சில கட்;டளைகளுக் கூடாக இயங்கும் பிரேத பரிசோதனை அலுவலகம் அப்போதைய ஆட்சியின் முகமாக வெளிப்படுத்தியிருந்தார் இயக்குனர் Pablo Larraín.

அசோக ஹங்கம அரசு இயந்திரத்தின் அநீதிகளை வெளிப்படுத்துவதற்கு பதிலாக மீண்டும் ஒரு போர் வெடித்து விடுமோ என்ற அச்சத்தில் முன்னால் போராளிகளை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற கற்பிதத்துக்கு வருகின்றார். இவரும் அரச பிரதிநிதியோ என்ற அச்சம் படத்தைப் பார்த்தவுடன் எழுகின்றது.

6.

போருக்குப் பின்னான படைப்புக்கள் போரினால் ஏற்படுத்தியுள்ள உள்மனச் சிக்கல்களையும் போர் ஏற்படுத்தியுள்ள மனக் காயங்களையும் குற்ற உணர்வையும் கருப்பொருட்களாக பதிவு செய்கின்றன. இந்த மெய் யுணர்வு விளக்கத்தை சில படைப்பாளிகள் சிறப்பாக வெளிப்படுத்த தவறிவிடுகின்றார்கள். பிரசன்னா விதானகே, லெனின் சிவம், சதா பிரணவன் போன்றோர் இதனை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். போரினை கட்டுடைக்கும் இப் படைப்புக்கள் சமூக சக்திகளையும், ஆக்கிரமிப்புச் சக்திகளையும் இனம் காட்டத் தவறவில்லை. இவ்வாறான ஆழமான படைப்புக்ளின் தொடர்ச்சி போரின் கோரத்தையும் பன்முகத்தன்மையும் உலகிற்கு நினைவூட்டியவ ண்ணமே இருக்கும்.