Reviews
மக்ரா
Reviews May 19, 2017
0

புலம் பெயர் தமிழர்களை பற்றி பேசும் ஒரு கனேடிய திரைப்படம்

December 2016 | மக்ரா

"ஓம் என்ன... அவயளுக்கு நாட்டுலயும் மக்கள்லயும் அக்கறையில்ல... ஓடிப்போயி கனடாவுல செட்டில் ஆயிட்டாங்கள். இப்ப கண காசு சம்பாதிக்கினம். நல்லா வாழினம்...

ஒம்... ஒம்... டயஸ்போராவுக்கெல்லாம் இவயள் தான் காசு கொடுப்பினம்"

புலம் பெயர் தமிழர்கள் பற்றி என்னிடம் இருந்த மனப்பதிவுகள் தான் இவை. 'A gun & a ring', நொடிப்பொழுதில் இந்த மனப்பதிவை சுக்கு நூறாக்கிவிட்டது.

ஆங்காங்கே சோபாவின் பேட்டிகளை பார்க்கும் போது புலம் பெயர் தமிழ் மக்கள் படும் கஷ்டங்கள் பற்றி ஒரளவு புரியும். ஆனால் அவை இந்தளவு ஆழமாக தாக்கம் செலுத்தவில்லை.

'A Gun & A Ring' - 2013 இல் வெளிவந்த கனேடிய தமிழ் இயக்குனர் Lenin M. Sivam இயக்கிய திரைப்படம்.

5 வெவ்வேறு நபர்களின் கதைகள். அந்த ஐந்து கதைகளுமே, புலம் பெயர் தமிழர்கள், கனடாவில் படும் ஐந்து வெவ்வேறு துன்பங்களை மையப்படுத்திய கதைகள். கடைசியில் ஒவ்வொரு கதைக்கும் இன்னொரு கதையுடன் எவ்வாறு தொடர்புபடுகிறது என்பது தான் படம்.

புலம் பெயர் தமிழர்களில் கனடாவிலும், பிரான்ஸிலும், பிரிட்டனிலும் செட்டில் ஆகி வாழ்க்கையில் முன்னேறிவர்களும் இருக்கிறார்கள். உண்மை... அவர்கள் தாம் புலம் பெயர் தமிழர்களாக எம் கண்முன்னே நிற்பவர்கள். அல்லது நாம் ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்டவைகள்.

ஆனால் அதையும் தாண்டி இலங்கையில் பட்ட கஷ்டத்துக்கு ஒப்பாக அங்கேயும் நாயாகவும் அடிமையாகவும் உழைத்து, கஷ்டப்பட்டு பிழைப்பை நடத்தும் மக்களின் தொகைதான் அதிகம். இந்த படத்தில் காட்டப்படும் 5 கதைகளில் ஏதாவது ஒன்றிற்குள் அவர்களது வாழ்க்கை கண்டிப்பாக உள்ளடங்கும்.

சரி... இலங்கையில் தாம் தமக்கு பாதுகாப்பு இல்லை அல்லது உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்று புலம் பெயர்ந்து வந்தால் அங்கேயும் நிம்மதி இல்லை என்பது எவ்வளவு பெரிய துரதிஷ்டம்??

அதுவும் படத்தில் ஒரே ஒரு கதையில் மாத்திரம் தான் ஒரு கனேடியன் மூலம் பிரச்சினை வருகிறது. இது மிக முக்கியமான ஒரு பாயிண்ட். அதாவது கனடாவில் தமிழர்களுக்கு வாழும் சூழல் உள்ளது. ஆனால் அங்கே தமிழர்களுக்குள் நிகழும் முரண்களால் தான் அனேக பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பது யோசிக்க வைக்கும் ஒரு விடயம். அல்லது பிரச்சினைகளின் மையப்புள்ளி என்றும் கூறலாம். படத்தின் தலைப்பை போலவே அனேக பிரச்சினைகளுக்கு காரணம் துப்பாக்கியும் மோதிரமும் தான். என்ன மாதிரியான பிரச்சினைகள் என புரியும் என நினைக்கிறேன்.

படத்தில் மிக முக்கியமான இரு காட்சிகளில் இலங்கை அரசுக்கும், தமிழக அரசுக்கும் செம்ம அடி விழுகிறது. குறிப்பாக இலங்கை இனப்பிரச்சினையை வைத்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எவ்வாறு அரசியல்பிழைப்பு நடத்தினார்கள் என்பதை அதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

படத்தின் screenplay மிகவும் நுணுக்கமாக இருக்கிறது. அண்மையில் பார்த்த படங்களிலேயே திரைக்கதையை perfect ஆக செதுக்கி இருக்கும் ஒரு சில திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம். அதுமட்டுமல்ல... சமூக மட்டத்தில் விவாதங்களை கிளப்ப வேண்டிய ஒரு படமும் தான்.

Leave a Reply