Reviews
ப.வி.ஶ்ரீரங்கன்
Reviews May 19, 2017
0

புலத்துச் சினிமா : "துவக்கொன்றும் மோதிரமும்"

October 2016 | ப.வி.ஶ்ரீரங்கன்

"துவக்கொன்றும் மோதிரமும்" என்ற தமிழ்ப் படத்தை ஐ.பி.சி. மூலமாகக் காணக்கிடைத்தேன்.மௌனித்துப் போனேன்.நம் வாழ்வனுபவத்துகுள் நின்று ,நிதானமாக நம்மைக் குடையும் நமது கடந்தவிட்ட வாழ்வானது, யதார்த்தத்தை விட்டுச் சற்றேனும் விலாகாத திரைவழி ஒவ்வொரு ஒளிச்சட்டகத்துள்ளும் உயிர்வாழும்போது ,மௌனிக்காமல் என்ன செய்யமுடியும்?
 
கதை சொல்லும் கோணம் புதிது ;பாத்திரப் படைப்புகளை வார்த்துக்கொண்ட வியூகம் தர்க்கமானச் சிந்தனையின்வழி உருவாகியிருக்கும் யதார்த்தம் ,திறன்வாய்ந்த கலைஞர்களை எம்மிடம் ஒப்படைத்திருக்கிறது இந்தச் சினிமா!
 
பல்வேறு கதைக்கோணமும் ஒரு துப்பாக்கி மற்றும் மோதிரம் வழியாக ஒன்றுபடும் தருணத்துள் அதஃது (துப்பாக்கி - மோதிரம்) , அதன் வேலையைச் செய்கிறது.ஒரு கையுள்ளிருந்து இன்னொரு கைக்கு மாறுபடும்போதுங்கூட அவை தமது கடமையைச் செய்கின்றன.
 
இதுவரை ,நான் தமிழ்ச் சினிமா காட்டும் பெண்களையே நமது சூழலுட் பார்த்தேன்.சுயமான தேர்வற்ற முடிவெடுக்கும் ஆற்றலற்ற தொங்குசதைகளாக மாற்றப்பட்ட பெண் இங்கே , சுயமான -சுதந்திரமாக முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவளாக வருகிறாள்.தலைமுறை இடைவெளி தாண்டியும் அவள் ,நிலத்துப் புலத்து மகளாக இருக்கும்போதுகூட அவள் பொதுமையானவொரு தளத்துக்கு இறுதியில் வருகிறாள். மோதிரம் இறுதியில் இனம் ;மதம் ;மொழி கடந்து சுயமான -சுதந்திரமான ;முடிவெடுக்கும் ஆற்றல் நிறைந்த ;தன் வாழ்வைத் தானே தீர்மானிக்கும் இருவரோடும் சேர்ந்து அவர்களைப் பிணைக்கிறது.
 
உலக மாற்றுச் சினிமா வரலாற்றுள் கியூபா -ஈரான் மற்றும் கிழக்கு ஐரோப்பிய ; ஆபிரிக்கச் சினிமாவுக்கு மிகுந்த மரியாதை உண்டு.அந்த மரியாதை சிங்களச் சினிமாவுக்கு அதிகம் பகிரப்பட்டது.இந்த மரியாதையை வழங்கக்கூடிய அனைத்துத் தகமையும் இந்த "ஓர் துப்பாக்கியும் மோதிரமும் "எனுஞ் சினிமாவுக்கு உண்டு.
 
எங்களுக்குள் அதிகம் அநுபவப்பட்டத்தும் ,நம்மைத் தொடர்ந்து தொந்தரவு செய்து ,நமது மனதுள் வெறுப்பையும் உமிழும் கடந்தகால இயக்காவாத அரயகத்தின் கரும் புள்ளி படுகொலை.அதன் சாரத்தை அநுபவப்பட்டவர்களத்து உணர்வுக்கு வெளியிலிருப்பவர்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது.இந்தப்படத்துள் காட்டப்படும் இவ் நிகழ்வனுபவத்தின் மனது, ஒரு வகையான போரட்டத்தினதும் -போராளிகளதும் ஆன்மைவைச் சிதைத்த உளவியல் மனது.இது உருவாகும் விதம் ஆரம்பத்திலேயே அதிகாரத்தின் வழி நிழலாகத் தொடரும் புள்ளியைக்கூட இப்படஞ் சொல்லும் வியூகத்துள் வெற்றி பெறுகிறது.
 
ஈழத்துத் தமிழுக்கு திரை வசனம் சரிப்படாது என்று பகிடிவிடும் மூஞ்சிகளுக்குக் கரியைப்பூசி , ஆற்றல்மிக்க நமது வசனத்தைத் திரை வசனமாகக் காணும்போது அழகும் ;யதார்த்தமாக நமது வாழ்வும் நமக்குள்ளே மீளவும் இயக்கம் பெறுகிறது.நம்மைக் கதையோடு ஒன்றித்து அழைத்துச் செல்லும் அந்தச் சினிமா இறுதியில் பல்வேறு உளவியல் பிரச்சனைகளைப் பேசியபடி சிறார் வாழ்வு - பாலியல் முரண் ;கொலை ;காதல் ;வாழ்வின் மகத்துவம் ;மனிதப்பொதுமை எனப் பல தளத்துள் நமக்குள் அநுபவமானதாகவே -இயல்பாகவே ஏற்றுக்கொள்ள வைக்கிறது.
 
புறத்தில் நின்று பாடம் நடாத்தும் தமிழகத்துச் சினிமாவுக்கு ,கரும் புள்ளி ; செம்புள்ளி குத்தித் துரத்தியடிக்கும் ஆற்றலது ஒரு விதையை இந்தப் புலத்துச் சினிமா செய்து முடித்துவிட்டுச் சுதந்திரமான ஒரு பெண்ணையும் ; ஆணையும் ஒரு மோதிரத்தோடு இணைத்துவிட்டு நமது படிமத்தை -கற்பிதத்தைக் கலைத்துவிட்டுத் துப்பாக்கிக்குத் தீர்ப்பெழுதி விலகுகிறது.
பாத்திரவளர்ச்சியுள் இந்தச் சினிமா ஒரு மைல் கல்!
 
எந்தப் பாத்திரமும் எவருக்குஞ் சோடைபோனதில்லை.அவரவர் -அவரவராய் வாழ்கிறார்கள்.கதாநாயகர் -கதா நாயகி என்ற ஒரு கணுக்கூட இப்படத்தில் தெரியவே இல்லை!;பொதுவாக வாழ்விலும் அப்படியேதாம் வாழ்வு நகர்கிறது.போலி மனிதர்களையோ ;சாகச வித்தகர்களையோ அன்றிச் சினிமாத்தனமான -செயற்கைத் தனமான கற்பித மாதிரி மனிதர்களையோ இங்கு காணமுடியாது.இதுதாம் இப்படத்தின் வெற்றியும்கூட.
 
ஒருமுறை படம் பார்த்துவிட்டு ,அதை விளங்கச் சிந்திக்க வைக்கும் ஆற்றல் இப்படத்துக்குள்ள சிறப்பு.நமது சிந்தனைக்குச் சவால்விடும் கதை நகர்த்தும் அழகு எனக்குப் பிடித்தது.
 
ப.வி.ஶ்ரீரங்கன்
30.10.2016