Reviews
புருஜோத்தமன் தங்கமயில்
Reviews May 19, 2017
0

இது எமது சினிமா இறுமாப்போடு சொல்லலாம்!

4TamilMedia | Sept 2014 | புருஜோத்தமன் தங்கமயில்

எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால், ஏற்கனவே கோலொச்சும் ஏதோவொரு கலை வடிவத்துக்குள் மூழ்கிப்போயிருக்கிற எமக்கு ‘எமது அடையாளம்’ என்று சொல்லக் கூடியது பெரும் வீரியத்துடன் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகவே உண்டு. அதுதான், பல தருணங்களில் எமது படைப்புக்கள் பலவற்றை புறந்தள்ள காரணமாகவும் இருக்கிறது. (ஏனெனில், அவை பல நேரங்களில் குறைப் பிரசவங்களாகவும் இருந்து விடுகின்றன.)
 
கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட எமது சினிமாவான ‘A Gun & a Ring’கை சற்று முன்னர் தான் பார்த்துவிட்டு திரும்பினேன். 170 பேர் கொள்ளக் கூடிய திரையரங்கொன்றில் இலங்கையின் முன்னணி இயக்குனர்கள், படைப்பாளர்கள், ஆர்வலர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என்று பல தரப்பட்டவர்களும் அரங்கு நிறைந்திருக்க படம், பார்த்து திரும்பியிருக்கிறேன்.
 
A Gun & a Ring படம் ஆரம்பித்தது முதல் ‘இது எமது சினிமா’ என்கிற இறுமாப்பும், அதற்கான ஆதரவும் மெல்ல மெல்ல அதிகரித்தது. சர்வதேச திரைப்பட விழாக்களில் ஏற்கனவே கலந்து கொண்டு வெற்றி பெற்ற படம் தான். ஆனாலும், ஏனைய சமூகத்தினருக்கு மத்தியிலிருந்து நாமும் அதைக்கண்டு உணர்கையில் அற்புதமாக இருந்தது. (குறிப்பாக, சிங்கள கலைஞர்கள், படைப்பாளர்களுக்கு மத்தியில்)
 
ஈழத்துக்கான ஆயுதப் போராட்டங்கள் கொடுத்த விளைவுகள் ஏராளம். அது, நாம் யூகிக்க முடியாத பக்கங்களில் எல்லாம் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு மென் உறக்க நிலையில் இருக்கின்றது. அதன் விளைவுகள் எதிர்காலத்திலும் தொடரவே செய்யும். அப்படியான சில விளைவுகள் ஒரேயிடத்தில் சந்திக்கின்ற போது நிகழ்வதுதான் A Gun & a Ring. அது, கனடாவில் திரைக்கதையாக சித்தரிக்கப்படுகின்றது.
 
படம் ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்து இறுதிக் காட்சிகளில் அனைத்து கிளைக் கதைகளின் முடிச்சுக்களும் அவிழ்ந்து அவை இணையும் இடத்தில் வேகம் பிடித்து நிறைந்து போகிறது.
 
சகோதர கொலைகள் புரிந்த முன்னாள் இயக்கக்காரர், ஈழத்திலிருந்து எல்லாமும் இழந்து திருமணக் கனவோடு வரும் இளம் பெண், தன்னுடைய மனைவி இன்னொருவனோடு சென்றுவிட்டாள் என்கிற இயலாமையோடு அல்லாடும் இளைஞன், கனடாவில் பிறக்கும் ஈழத்தின் அடுத்த தலைமுறை எதிர்கொள்ளும் கலாசார சிக்கல்கள், குழந்தைகளைக் கடத்தி பாலியல் வல்லுறவு புரிந்து கொலைசெய்யும் வெள்ளையின மத்திய வயதைக் கடந்தவன்… இப்படி சில கதைகள் ஒரே புள்ளியில் இணைக்கின்றன. திரைக்கதை படத்தின் போக்கில் எந்தவித குழப்பங்களையும் செய்யாமல், ஆசுவாசப்படுத்திக் கொண்டு உள்வாங்க வைக்கின்றது.
படத்தினை எழுதி இயக்கியிருக்கும் லெனின் எம் சிவம், ஈழ- புலம்பெயர் சினிமாவின் குறிப்பிடத்தக்க ஆதர்சமாக கொள்ளப்படக் கூடியவர். ஏனெனில், தென்னிந்தியச் சினிமா பற்றிய கனவுகளோடு அலையும் எம்மவர்களுக்கு ‘எமக்கான சினிமா’வை எமது அடையாளங்களோடும், எமது கதையோடும் எடுக்க முடியும் என்ற விடயத்தை திறைமையாக நிறுவியதற்காக.
 
ஈழத்து- புலம்பெயர் தமிழ் மொழி வழக்கினை திரை உரையாடல்களுக்குள் வைக்கும் போது உறுத்தல் ஏற்படாது என்பதை A Gun & a Ring நிரூபித்திருக்கிறது. எமது மொழி வழக்கினை பிழையாகவே சித்தரித்து, எமது மொழி வழக்கில் (உரையாடல்களில்) சினிமா என்பது ஜீரணிக்க முடியாதது என்ற ரீதியில் முன்வைத்த தென்னிந்திய சினிமாவை ஓங்கி அறைந்திருக்கிறது.
 
குறிப்பாக, செல்லக் கூடிய இன்னொரு விடயம் படத்தின் நடித்திருப்பவர்களிடம் மிகை நடிப்பு என்பது அவ்வளவாக இல்லை. சில நேரங்களில் அது குறைவாக இருக்கின்றதே அன்றி, பெரும்பாலும் இயல்பாகவே நடித்திருக்கிறார்கள். எமது கலைஞர்கள் என்ற கொண்டாட்ட மனநிலையை கொடுக்க A Gun & a Ring பெருமெடுப்பில் முயன்றிருக்கிறது.
 
இயக்குனர் லெனின் எம் சிவத்தின் திரைக்கதையின் மீது நம்பிக்கை கொண்டு படத்தினை தயாரித்திருக்கும் விஷ்ணு முரளி பாராட்டப்பட வேண்டியவர். ஏனெனில், A Gun & a Ring வந்திருக்கா விட்டால் எமது சினிமா அடையாளங்களுக்கான முன்னுதாரணமாக படமொன்றைக் கொள்ள நீண்ட காலம் ஆகியிருக்கும்.
 
எமது படைப்புக்கள், எமது சினிமாக்கள் என்று எமது தனி ஆவர்த்தனத்தை உலகமே காணும் அளவுக்கு நாங்கள் நிகழ்த்த வேண்டும். அதற்கு, நிறைய உழைப்பு அவசியம். A Gun & a Ringகை முன்னுதாரணமாகக் கொண்டு இனி வருபவர்கள் அடுத்த பாய்ச்சலுக்கு தயாராக வேண்டும். 
 
அதைவிடுத்து, “புதியவர்கள், அவர்களை வளர்த்துவிட வேண்டும்” என்று தரமற்ற படைப்புக்களை அதிகமாக புகழ்ந்து எமது இடத்தினை இழந்து விட வேண்டாம். முக்கியமாக, ஈழத்து சினிமா ஆர்வலர்கள், விமர்சகர்கள், படைப்பாளிகள் தமது நியாயமான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும். அது, நல்ல படைப்புக்களையும், சினிமாக்களையும் கொண்டு வர உதவும்.
 
இன்னும் சில காலத்துக்கு தொடர்ந்தும் எமது சிறந்த சினிமா என்றால் A Gun & a Ring என்பது மட்டுமே என்பதாக இருந்து விடலாகாது. அதனையும் தாண்டிய நல்ல சினிமாக்கள் வர வேண்டும். (A Gun & a Ring படத்திலும் குறைபாடுகள் உண்டு. குறிப்பாக, ஒளிப்பதிவு. சிலவேளை பெரும் திரையில் காணும் போது அது சிக்கலாக இருக்கின்றதோ என்னவோ?)
 
இறுதியாக, A Gun & a Ring பார்த்துவிட்டு வெளியில் வந்ததும் ஊடக நண்பர்கள், திரை விமர்சகர்கள் சிலருடன் கொஞ்சம் பேசக் கிடைத்தது. பேசிய அனைவரிடத்திலும் வெளிப்பட்டது ‘படம் எதிர்பார்த்ததைவிட எவ்வளவோ மேல்; எமது சினிமா என்று கொண்டாடக் கூடியது’ என்பதே. அதுவே, எங்களை மிகுந்த மகிழ்ச்சியான மனநிலையோடு வெளியேற வைத்தது..!
 
வாழ்த்துகள் இயக்குனர் லெனின் எம் சிவம் மற்றும் குழுவினருக்கு…!