Reviews
கலாநிதி ந இரவீந்திரன்
Reviews May 19, 2017
0
கனடாவிலிருந்து வெளியேறும் இறுதி நாளில் மாலைப் பொழுதில் (மன்ற ஒன்று கூடலுக்கு முன்னதாக) ஒரு திரைப்படத்தை நான் பார்த்து அது குறித்த விமர்சனத்தைக் கூற வேண்டுமென நண்பர் சேகர் கேட்டுக் கொண்டார்.
“எ கன் அன்ட் ரிங்” என்ற அந்த சினிமாவை எழுதி இயக்கியிருந்த லெனின் எம்.சிவம் தனது இல்லத் திரையில் அதனைக் காட்சிப்படுத்தியிருந்தார். விரைவில் கனடாவில் திரையிடப்பட உள்ள அதனை முன்னதாகப் பார்க்க இயலுமானதர்க்கு நண்பர்களுக்கு நன்றி சொல்வது அவசியம்.
 
ஏற்கனவே இது சீனாவின் சங்காய் நகரில் விருதுக்காகத் திரையிடப்பட்டிருந்தது. அந்தத் திரைப்பட விழாவில் போட்டியிட்ட பல படங்கள் திரையிடப்படாமல் போக இது தெரிவு செய்யப் பட்டமையே இதன் தகுதிக்கான சான்றாக அமைகிறது. அவற்றுள் ருசியத் திரைப்படம் விருதைத் தட்டிச் சென்ற போதிலும் இது பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. பார்க்கும் எவரும் பாராட்ட முன்வரும் படைப்பாகவே இது அமைந்துள்ளது. சரியான கதைத் தேர்வு உரிய வடிவப் பொருத்தத்துடன் வெளிப்பாடு எய்தியமையால் இந்தத் தகுதிப்பாட்டை எட்டியுள்ளது.
 
எமது வழக்கமான தமிழ்ச் சினிமாவிலிருந்து வேறுபட்டு உண்மையில் சினிமா மொழி எவ்வகையில் அமைதல் அவசியமோ அவ்வகையில் இது படைப்பாக்கப்பட்டுள்ளது. தமிழில் இத்தன்மையான சினிமாக்கள் மிக மிகக் குறைவு. அதன் காரணமாக இதனை எடுத்த எடுப்பில் எமது ரசனைக்குரியதாக்குவதில் சிரமம் இருக்கலாம். அதனோடு ஒன்றித்துப் பயணிக்கும்போது நல்ல சினிமாவை அனுபவித்த இன்பத்தைப் பெறவியலும். நேர்கோட்டுப் பாதையில் கதை சொல்வதாயில்லாமல் பார்வையாளரை சிந்தனைவயப்பட்ட உடன் பயணியாக அழைத்துச் செல்லும் வகையில் காட்சித் தொகுப்புகளைக் கட்டமைத்துச் செல்கிறது இச்சினிமா.
 
இந்திய மண்ணில் தளம் அமைத்துப் பல இயக்கங்கள் செயற்பட்ட எண்பதுகளின் ஒரு காட்சிப்படிமத்துடன் சினிமா தொடக்கம் பெறுகிறது. இயக்கத்திலிருந்து தப்பியோட முனைந்த நண்பர்கள் குறித்த தகவலை விசாரிப்பாளர் அறிந்திருப்பதாக நம்பி உண்மைகளைக் கக்கிய ஒரு போராளி வெளியேற அனுமதிக்கப்படுகிறான். சில ஆண்டுகளின்பின் (சமகாலத்தில்) அவன் கனடாவில் தனது மனைவி இன்னொருவனோடு வாழ சென்றது குறித்து அவர்களோடு தர்க்கப்படுவதில் அடுத்த காட்சிப்படிமம் தொடங்கும். அவள் திருமண மோதிரத்தைக் கழற்றி மூஞ்சியில் விட்டெரிந்து இனிமேல் தொந்தரவு செய்துகொண்டு வரவேண்டாம் என எச்சரிப்பதோடு அடுத்த காட்சிப்படிமம் தொடரும். பின்னரான காட்சிகளை இங்கே என்னாலும் அதே ஒழுங்கில் தர இயலாது; அது அவசியமும் இல்லை.
 
இன்றைய கனடா மண்ணின் சில நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக வருகின்றன. ஒர்கனில் ஈடுபாடின்றி அல்லாடிக்கொண்டிருக்கும் இளைஞன் ஒருவனிடம் அவனது தந்தை வந்து அவனது நண்பன் பொதுத் தோட்டத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்திருப்பதான செய்தியைக் கூறுவார். உணர்வற்றவகையில் கேட்டு, தொடர்ந்து ஒர்கனில் விரலை தவழவிடுகிரவனின் முகத்தில் ஒரு சோகமும் எதிர்பார்த்தது போன்ற பிரதிபலிப்பும் இருக்கும்.
 
படம் பார்த்துமுடிக்கும்போது எமக்குள்ளே ஓடும் எமக்கேயான சினிமாவானது காட்சிகளை ஒன்றிணைத்து விசாலித்த வாழ்க்கை அனுபவங்களைக் கட்டமைத்துக்கொள்ளும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நண்பனின் தந்தை வழங்கிய துப்பாக்கி அவரைச் சுடுவதற்காக முன்னாள்(மாற்று இயக்கப் போராளி) கொண்டுவந்திருந்ததாகும். தன்னை விட்டு விலகிய மனைவியையும் புதிய கணவனையும் கொல்வேன் என ஆரம்பத்தில் கூறிப் போனவன் பின்னால் துப்பாக்கியைத் தேடிப் போனபோது அதற்காகவே தேடுவதாக எண்ணியிருந்தோம். முடிவில்தான், இடையில் மறைக் காட்சியில் இந்த தந்தையாகியுள்ள முன்னாள் விசாரிப்பாளரை அவன் கண்டுகொண்டதை அறிவோம்.
 
அவன் தேடிய துப்பாக்கி கிடைக்காமல், ஆகாயத்திலிருந்து விழுந்த(கடவுளே தந்ததாக அவன் கருதும் துப்பாக்கி) விசாரிப்பாளனைக் கொல்வதே நியாயம் என உணர வைத்திருந்தது. பொல்லால் அடித்தே கொல்கிற அவனது தாக்குதலுக்கு உள்ளான தனது உடல்நிலை காரணமாயே தனது மனைவி தன்னை நீங்கியதாக அவன் முடிவு செய்கிறான். மேலிருந்து விழுகிற துப்பாக்கி தனியே விளையாடும் தமிழ்ச் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்காலாக்கிக் கொல்லும் கயவன் ஒருவனின் கையிருந்து நழுவி விழுந்ததாகும். அந்தக் கயவனைத் துரத்திக் கொல்லும் ஆங்கில காவலன் காதல் தோல்வியில் கழற்றி வீசிய மோதிரம் யுத்த பூமியிலிருந்து போன தமிழ்ப் பெண்ணின் விரலுக்கு ஆபிரிக்க கறுப்பின அகதியால் காதல் அடையாளமாக அணிவிக்கப்படுவது தொடர்பில் இன்னொரு கதையும் அங்கங்கே காட்சிப்படிமன்களாய் அவ்வப்போது ஊடறுத்து வந்தது. இன்றைய வாழ்நிலையில் கனடாத் தமிழரின் இரண்டக மனத்தை வெளிப்படுத்துவதும், இனம் கடந்து போர்ச் சூழல் ஏற்படுத்தும் ஒத்துணர்வு அதே பாதிப்பை உணர்ந்தவரிடமே சாத்தியம் என்பதை வெளிப்படுத்துவதையும் காட்டுவதாக இது அமைந்தது.
போர்ச் சூழலில் பாதிப்புற்ற பெண்ணைத் திருமணம் செய்வதாய் அழைத்தவன் பின்னடித்த நிலையிலேயே ஆபிரிக்க யுத்த பூமியோன்றிலிருந்து வந்த இளைஞன் மீது காதல் கொள்கிறாள் தமிழ் யுவதி. மனம் மாறி ஏற்கிறேன் எனவரும் கனடாத் தமிழரிடம் அவள் கூறும் வார்த்தைகள் இத்திரைக் காவியத்தின் அதியுச்சச் செய்தியாகும். வெறும் தமிழ் உணர்வு என்பது மட்டுமே இணைவை சாத்தியமாக்கிவிடாது, யுத்த அவல உணர்வைக் கனடாத் தமிழரால் முழுதாக உணர்ந்துவிட இயலாது-வாழ்ந்து அனுபவித்தவருக்கே இயலுமானது என்பது உணர்த்தப்படுகிறது. ஆக, ஈழத் தமிழ்த் தேசியர், கனடாத் தமிழினத்தவர் என்பவரிடையே பரஸ்பரம் புரிந்துணர்வு கொள்ள எந்த வடிவில் முயல வேண்டும் என்ற தேடலை மேற்கொள்ள இத்திரைப் பிரதி தூண்டுதலை வழங்குகிறது.
 
இப்பேசு பொருளுக்குப் பாத்திரங்கள் வாயிலாக உயிரூட்டிய நடிகர்கள் அனைவருமே மிகைத்தன்மை அற்ற அவசியப்பட்ட நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்கள். பாத்திரத் தேர்வுக்கும், இயல்பான நடிப்பை வெளிக் கொண்டுவந்த பாங்குக்கும் இயக்குனர் தனியே பாராட்டப்பட வேண்டியராகிறார். வெறும் இனவாதத்துக்கு அப்பால் வர்க்க-தேசிய ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை பெறும் மார்க்கத்தைத் தேட சினிமா ஊடகம் வாயிலாக வழிப்படுத்தும் இந்தத் திரைப்படம் கதை சொல்லல் என்பதற்கும் அப்பால் திரை மொழி வெளிப்பாட்டிலும் வெற்றிபெற்றுள்ளது. தமிழ்ச் சினிமா இன்னொரு தளத்தில் புதிய பரிமாணத்துடன் மேற்கிளம்புவதை லெனின் எம்.சிவம் சாத்தியப்படுத்தி உள்ளமைக்காக பாராட்டப்பட வேண்டியவர்.
 
கலாநிதி ந இரவீந்திரன் | சிரேஷ்ட விரிவுரையாளர், மஹரகம ஆசிரியர் பயிற்சி கலாசாலை| இலங்கை