Reviews
கருணா வின்சென்ற்
Reviews May 19, 2017
0

புலம்பெயர் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்!

காலசுவடு பத்திரிகை | ஜூலை 2013 | கருணா வின்சென்ற்

அறுபதுகளின் பிற்பகுதி. இலங்கையின் கரையோரக் கிராமம் ஒன்றில் ‘ஆழிக்கரையின் அன்புக் காணிக்கை’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. திரைப்படத்தில் அனாதை இளைஞன் சங்கராகவும், சி.ஐ.டி. சிவராமாகவும் எம்.எல். ஜெயகாந்த் நடித்துக்கொண்டிருக்கிறார். கிராமத்தை ஆட்டிப்படைக்கும் பணக்காரர் ராஜப்பன் இரகசியமாகக் கடத்தல் தொழிலும் செய்கிறான். ராஜப்பனால் கொல்லப்பட்ட சங்கர், சிவராமாகத் திரும்பி வந்து கிராமத்தையும் காதலி மஞ்சுளாவையும் மீட்கிறான். இந்தத் திரைப்படத்துக்கு அப்போது தோன்றியிருந்த ‘இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின்’ உதவி கிடைக்கவில்லை. பத்து ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருந்த திரைப்படம் 1973 நவம்பரில் ‘மீனவப்பெண்’ என்று பெயர் மாற்றம் பெற்றுத் திரைக்கு வந்தது. சுமாராக ஓடியதாகவே சொல்லப்படுகிறது.

கதாநாயகன் எம்.எல். ஜெயகாந்த் நூறு நாடகங்களுக்கு மேல் எழுதி மேடையேற்றியவர். நடிப்பில் இருந்த தீராக் காதலாலேயே நாடகங்களிலிருந்து திரைப்படத் துறைக்கு வந்திருக்கிறார். அவர் வேறு படங்களில் நடித்தாரா என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக எம்.எல். ஜெயகாந்த் என்கிற வி.எம்.எல். சிவத்துக்கு தனது மகன் ஈழத்துச் சினிமாவின் முக்கியமான படைப்பாளியாக வரப்போகிறார் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஈழத்தில் பல விடுதலை இயக்கங்கள் இருந்த காலப்பகுதி. ஏதோ ஓர் இயக்கத்தின் முகாமிலிருக்கும் விசாரணைக் கூடம். மண்டியிட்டிருக்கும் ஓர் இளைஞனுக்கு விசாரணை நடக்கிறது. விசாரணையில் அவன் பல பெயர்களைக் கூறுகிறான். அதன் பலனாக விடுதலை செய்யப்படும் அவன் வந்தடைகிற நாடு கனடா. இப்படித்தான் துப்பாக்கியும் கணையாழியும் (A Gun & A Rinரீ) படம் ஆரம்பிக்கிறது.

தனது பணியை நேசிக்கும் ஒரு புலனாய்வு அதிகாரி, போரை மறந்து அமைதியாக வாழ முனையும் ஓர் உணவக ஊழியன், போரில் இருந்து மீண்டு கனடாவுக்கு வரும் ஒரு பெண், தினமும் சுதந்திரமாகப் பூங்காவில் விளையாடச் செல்லும் ஒரு சிறுமி, தந்தையின் நிர்பந்தத்தில் அல்லாடும் ஓர் இளைஞன், மனைவி காதலனுடன் சென்றுவிட விரக்தியில் வாழும் ஒருவன். இப்படி ஆறு பேரின் வாழ்க்கையில் இரண்டு வாரங்களில் நடக்கும் சம்பவங்களைச் சொல்லிச் செல்கிறது திரைக்கதை. ஆறு வெவ்வேறு கதைகள் ஒரு சிலந்தி வலைபோல பல்வேறு புள்ளிகளால் இணைக்கப்படுகின்றன. கணையாழியும் துப்பாக்கியும் இந்தக் கதைகளினூடே பயணிக்கின்றன. சில கதைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுகின்றன. சில கதைகள் தொடர்பின்றி இருக்கின்றன. ஆரம்பத்தில் முற்றிலும் புதிர் நிறைந்ததாக இருக்கும் கதைகளின் தொடர்புகள், ஒவ்வொன்றாக அவிழ்கின்றன. ஒவ்வொரு புதிரும் அவிழும் போதும் ஒவ்வொரு செய்தி சொல்லப்படுகிறது. இறுதியில் படம் நிறைவு பெறும்போது பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நகரில் வாழ்க்கை எவ்வாறு தவிர்க்க முடியாதவாறு ஒவ்வொருவருடனும் பிணைந்திருக்கிறது என்பது தெரியவருகிறது.

போர் நிகழும் ஒரு சமூகத்தின் வாழ்வு கற்பனை செய்ய முடியாத வலியுடன் கூடியது. போர் முடிந்தது என்று சொன்னாலும் அந்தப் போரானது வாழ்க்கையை நிழல் போலத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அதன் தாக்கங்கள் பல தளங்களில் நிகழும். போரிலிருந்து மீண்டு வந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இருக்கின்ற இடங்களிலெல்லாம் ‘போர்’ பற்றிப் பேசப்படுவதைப் பல தலைமுறைகளுக்குத் தவிர்க்க முடியாது. ஹிட்லரின் வதை முகாம்களில் ஒன்றான அவுஸ்விட்ச்சில் இருந்து உயிர் தப்பிப் பின்னர் புகழ்பெற்ற எழுத்தாளராக மாறிய ப்றிமோ லீவி (Primo Levy) ஒருமுறை சொன்னது போல, “எதைப் பற்றி எழுத முனைந்தாலும் இந்தக் கொடூர நினைவுகளைத் திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியவிலை.”

துப்பாக்கியும் கணையாழியும் நுணுக்கமாக நமக்கு உணர்த்துவது இதைத்தான்.

பல தமிழகத் திரைப்படங்களில் ஈழப்போர் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றால் ஒரு குறித்த எல்லைகளுக்கப்பால் போகமுடிவதில்லை. போரின் பின்னணியிலிருந்து வந்திருக்கும் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். அந்தச் சமூகத்தின் கதைகள் நூறாயிரம். ஆனால் உணர்வூற்றோடு புரிந்துகொள்ள வெளியிலிருக்கும் சமூகத்தால் பெருமளவுக்கு முடிவதில்லை. லெனினின் A Gun & A Ring திரைப்படத்தில் வரும் ஆறு கதைகளும் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கும் மிகவும் புதியவை.

படத்தின் இறுதியில் நேர்த்தியான ஒரு செய்தி சொல்லப்படுகிறது. வன்னியாக இருந்தாலும் சரி, ஈராக்காக இருந்தாலும் சரி, சூடானாக இருந்தாலும் சரி போரின் பின்னணியிலிருந்து வரும் இருவர் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் விதம் வேறானது. சூடான் இனப்படுகொலையிலிருந்து தப்பித்துவரும் ஒருவருக்கு, ஈழப்போரிலிருந்து மீண்டு வரும் அந்தப் பெண் கூறுகிறாள்: ‘நாங்கள் இருவரும் ஒன்று.’ அந்தக் கதையுடனேயே படம் முடிகிறது. இதுதான் கனடியத் தமிழரான லெனின் எம். சிவம் எழுதி இயக்கிய A Gun & A Ring என்ற தமிழ்த் திரைப்படம் பதிவுசெய்யும் அழுத்தமான செய்தி.

A Gun & A Ring 16வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் தங்கக்கிண்ண விருதுக்குப் போட்டியிடும் திரைப்படங்களில் ஒன்றாகத் தேர்வாகியிருக்கிறது. இன்று முக்கியத்துவம் வாய்ந்த திரை விழாக்களில் ஒன்றாக ஷாங்காய் திரைப்பட விழா கருதப்படுகிறது. இதுவரை ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் தங்கக்கிண்ண விருதுக்கு (Golden Goblet Award) போட்டியிடும் திரைப்படங்களில் ஒன்றாக எந்தத் தமிழ்த் திரைப்படமும் தேர்வானதில்லை. இணை யத்தில் தேடியதில் நான்கு இந்தியத் திரைப்படங்களே இதுவரை இந்தத் தங்கக்கிண்ண விருதுக்குப் போட்டித் திரைப்படங் களில் ஒன்றாகத் தேர்வாகியிருப்பது தெரி கிறது. கடந்த வருடம் பிஜு இயக்கிய ‘ஆகாசத்திண்டே நிறம்’ என்ற மலையாளப் படம் இந்தப் போட்டியில் கலந்துகொண்டது. அப்போது ஷாங்காய் தங்கக்கிண்ண விருதுக்குப் போட்டியிடும் முதல் மலையாளத் திரைப்படம் என்ற அளவில் அது முக்கியத்துவமான செய்தியாக அமைந்தது.

இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை 1962இல் வெளிவந்த ‘சமுதாயம்’ திரைப்படத்துடன் ஆரம்பிக்கிறது. இலங்கையில் முப்பதுக்கு மேற்பட்ட முழுநீளத் தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கனடிய தமிழ் சினிமாவின் கதை தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கிறது. இதுவரை நாற்பதுக்கும் அதிகமான தமிழ்த் திரைப்படங்கள் கனடாவில் வெளிவந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவற்றை முயற்சிகள் என்ற அளவிலேயே கூறமுடியும். இந்த நிலையில் கனடியத் தமிழர் ஒருவர் இயக்கிய தமிழ்த் திரைப்படமொன்று முக்கியத் திரைப்படவிழாவொன்றில் போட்டிக்குத் தெரிவாகியிருப்பதைப் புலம்பெயர் சினிமாவின் மைல்கல் என்றே கூறலாம்.

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா 1993முதல் நடந்து வருகிறது. 2013ஆம் ஆண்டின் 16வது விழாவில் தங்கக்கிண்ண விருதுப் போட்டிக்கு 112 நாடுகள், பிராந்தியங்களிலிருந்து 1600க்கும் மேற்பட்ட படங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அவற்றில் 12 படங்களே போட்டிக்கான படங்களாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தன. ‘A Gun & A Ring’ அவற்றில் ஒன்று.

லெனினுக்கு இளவயதிலிருந்தே திரைப்படம் மீது தீராத ஆர்வம் இருந்திருக்கிறது. தந்தையாரின் திரைப்பட மற்றும் நாடக ஆர்வம் குடும்பத்தில் மிகுந்த நெருக்கடிகளை உருவாக்கியிருக்கிறது. ‘படித்து முடித்துவிட்டு எதையாவது செய்’ என்று குடும்பத்தினர் கூறிவிட்டார்கள். லெனின் வோட்டர்லூ பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியலாளராகப் படிப்பை முடித்தார். படிப்பை முடித்துப் பணியில் இணைந்ததும் முதல் வேலையாக றயர்சன் பல்கலைக்கழகத்தில் ‘திரைப்படப் பிரதியாக்கத்’ துறையிலும் தொடர்ந்து ஒளிப்பதிவு, தொகுப்பாக்கத் துறைகளிலும் பயின்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து ‘இனியவர்கள்’, ‘உறுதி’, ‘பக்கத்து வீடு’ போன்ற குறும்படங்களை இயக்கியிருக்கிறார். மூன்று கோணங்களில் கதை சொல்லப்படும் 1999, இவர் இயக்கிய முதல் முழுநீளத் திரைப்படம். இது கனடாவின் வன்கூவர் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

A Gun & A Ring நகர்ப்புற நாடகம் என்கிற வகையைச் சேர்ந்த திரைப் படம் என்று லெனின் கூறுகிறார். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து மேற்கில் வாழும் தமிழர்களுக்கு அருகிலேயே போர் உட்கார்ந்திருக்கிறது என்பதே கதையின் மையநாடி என்கிறார் அவர். திரைப்படத்தில் சுமார் ஐம்பது பேர் நடித்திருக்கின்றனர். பிரதியைத் தயார் செய்து அதை நேர்த்தியாக்க லெனினுக்கு ஏறக்குறைய ஒரு வருடம் எடுத்திருக்கிறது. சுறுசுறுப்பான கனடா வாழ்வில் மிகவும் திட்டமிட்டு இரண்டே வாரத்தில் முழுப் படப்பிடிப்பையும் நிறைவு செய்திருக்கிறார். படப்பிடிப்புக்குப் பிறகு தொகுப்பு, இசைச் சேர்க்கை போன்றவற்றுக்கு மேலும் ஒரு வருடம் எடுத்திருக்கிறது.
சந்தைப்படுத்துதலில் இருந்த சிரமங்களே ஒரு தமிழ்த் திரைப் படத்துக்கு ஆங்கிலத் தலைப்பு வைக்கக் காரணம் என்று லெனின் கூறுகிறார். சந்தைப்படுத்து தலுக்காக மொழியை விட்டுக் கொடுப்பது சரியானதாக எனக்குத் தெரியவில்லை. தலைப்பு தமிழில் இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

புலம்பெயர் திரைப்பட வரலாற் றில் வெளிவந்த ஒவ்வொரு திரைப் படமும் இந்த மைல்கல்லை எட்டுவதற்கு ஏதோ ஒரு வகையில் பங்காற்றியிருப்பதாகவே லெனின் கூறுகின்றார். தான் எடுத்த ஒவ் வொரு திரைப்படங்களிலிருந்தும் நிறைய விடயங்களைக் கற்றுக் கொண்டதாகக் கூறும் லெனின் இந்தத் திரைப்படத்திலும் பல புதிய விடயங்களைக் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார்.

புலம்பெயர் திரைத்துறை எதிர் கொள்ளும் சவால்கள் என்னவென்று கேட்டபோது, பொருளாதாரம் முக்கியமான சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்டார். புலம்பெயர் நாடுகளில் திரைப்படங்களைக் கலையார்வத்தாலேயே உருவாக்க முடிகிறது. இங்கு செலவிட்டப் பணத்தைத் திரும்பப் பெற்றாலேயே அது வெற்றி என்ற அளவிலேயே இருக்கிறது. இந்த நிலையில் திரைத் துறையை வணிகமாகக் கருதி முதலீடு செய்ய முன்வருபவர்களுக்கு வாய்ப்புகள் குறைவு. இந்த நிலையிலும் Eye catch Multimediaவைச் சேர்ந்த விஷ்ணு முரளி மிகவும் ஆர்வமாக இந்தத் திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார். உண்மையில் இவர்தான் இப்படி ஒரு திரைப்படம் உருவாக முக்கியமான காரணம் என்கிறார்.

அடுத்தது சுறுசுறுப்பான கனடிய வாழ்வியலில் கலைஞர்கள் கிடைப்பதும் சிரமமாக இருப்ப தாகவும் கூறுகிறார். எம்மிடம் ஏராளமான கதைகள் உள்ளன. ஆனால் அவற்றைத் திரைக்கதையாக்க வேண்டியிருப்பதாகவும் கூறுகிறார்.

லெனினின் தந்தையார் ஜெயகாந்த் நடித்த ‘மீனவப்பெண்’ படத்துக்கு அப்போது இலங்கையில் வெளிவந்த ‘தேசாபிமானி’ என்ற பத்திரிகையின் விமர்சனத்தில் ஒரு பின்குறிப்பு இருந்தது: ‘இலங்கையில் தமிழ்ப் படம் எடுக்கத் துவங்கி ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாகி விட்டன. பதினைந்து ஆண்டுகள் என்பது லேசுப்பட்ட சங்கதியல்ல. எனவே, பத்தாவது படம் லேசுப்படாத சங்கதியாக இருக்க வேண்டும்’.

A Gun & A Ring லேசுப்பட்ட சங்கதியல்ல. வரலாற்றுச் சாதனை. இனி புலம்பெயர் தமிழரின் கலை இலக்குகள் கூரையை நோக்கியல்ல, வானத்தை நோக்கியே அமையட்டும்.

கருணா வின்சென்ற்:

ஓவியர்;ஒளிப்படக் கலைஞர்; இதழியலாளர். கனடாவில் டிஜி வரைகலை அமையம் என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது ஓவியக் கண்காட்சிகள் பல்வேறு நாடுகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

நாடகங்களுக்கு மேடை அமைப்பு, ஒளி, ஒலி வடிவமைப்பு, கணினித் தொழில் நுட்பம் சார்ந்த வடிவமைப்பு ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர்.)