Reviews
கணரூபன்
Reviews May 19, 2017
0

சிந்தனைத் தூண்டல்கள் நிறையவே தூவப்பட்டிருக்கின்றன

ஈழத்திரை | Sept 2014 | கணரூபன்

கொழும்பு MC Superior அரங்கின் கொள்ளவு 170 பேர்; ஒரே ஒரு காட்சி! அன்றைய தினத்தில் வர முடியாது போனவர்களும், வந்தும் வரிசையின் கால்மாட்டில் அகப்பட்டுக் கொண்டவர்களும் பார்வையிட முடியாது போயினர். தெரிந்துதான் நான் வேளைக்கே போயிருந்தேன். வரிசையும், படமும் ஏமாற்றவில்லை.
 
இத் திரைப்படம் இன்னுமும் இங்கு பரவலாகத் திரையிடப் படவில்லை என்பதால் கதையினைத் தளர்த்தும் தகவல்களைக் தவிர்த்துக் கொள்ள விளைகிறேன். இருப்பினும் குறைத்துக் கொள்ள மட்டுமே முடியுமென்பது கண்கூடு.
பாராட்டுக்களும் நன்றியும் 1. இவ்வகையில் சில குறும்படங்களைக் கண்டிருக்கிறேன் எனினும் இலங்கைப் பேச்சுத் தமிழைத் துல்லியமாகக் கையாண்ட (நான் எதிர்கொள்ளும்) முதல் உருப்படியான முழுநீளத் திரைப்படம் இதுதான்.
 
பரந்துபட்ட நோக்கில் இது ஒரு மிகப் பெரிய ‘அடைவு’. அதனால்தான் முதலாவதாக இதைச் சொல்லத் துணிகிறேன். அத்தோடு பெற்றோரின் தமிழிலான கேள்விகளுக்குப் பிள்ளைகள் கலப்படமற்ற ஆங்கிலத்தில் பதில் சொல்லுஞ் செயற்பாடு எதார்த்ததைப் பிரதிபலிக்கிறது என்பது ஒரு புறமிருக்க, அது வேற்று மொழியினருக்கும் படத்தினைப் புரிவதில் உதவுகிறது, பதிலைப் பொறுத்துக் கேள்வியினை உய்த்தறிய ஏதுவாவதால்.
 
2. போர், புதிய கலாசாரப் பின்னணிகளை எதிர் கொண்ட, கொள்கிற புலம்பெயர் (கனடா) சமூகத்தைப் பதிவு செய்கிறது A Gun & a Ring. பலதரப்பட்ட மனிதர்களின் முரண்பாடுகளையும் போராட்டங்களையுங் கோர்த்து, ஒரு மோதிரத்தையும் ஒரு கைத் துப்பாக்கியையும் அதன் வழியே ஊடாட விட்டிருக்கிறது (அல்லது ‘கோர்க்க’? ). எனக்குப் மிகவும் பிடித்தவொரு விடயம், இதன் திரைக்கதையில் நிறையக் காட்சிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உபயோகங்களிருக்கிறன. முதற் காட்சியே அதற்கொரு உதாரணம்: கதைக்களம் கனடா என்பது ’சுவாரசியமான’ முறையில் உள்ளிடப்படுகிறது, தவிர காட்சியும் கதையின் ஒரு முக்கிய அங்கமாயிருக்கிறது. அடுத்த இலக்கத்தில் திரைக்கதைக் குறிப்புக்களைத் தொகுத்திருக்கிறேன்.
 
3. இது Conflictகள் நிரம்பி வழியுந் திரைக்கதை நிறைய முரண்கள், நிறைய ironies (உ+ம் இரும்பனின் கத்தியிலான பயம், serial child molester இன் அணுகுமுறை, வெளித் தோற்றத்துக்கு எதிர்ப்பதமான நடத்தைகள் etc), அருமையான, நினைவில் ஒட்டிக் கொள்ளும் பாத்திரப் படைப்புக்கள். மேற்சொன்ன இந்த ‘நினைவில் ஒட்டிக் கொள்ளுந்’ தன்மை இவ்வகையான துண்டாடப்பட்டிருக்குந் திரைக்கதைக்கு அதி முக்கியமானதாகிறது. அந்த வகையில் தனித்துவமான பாத்திரப் படைப்பு உத்திகளை இனங் கண்டு, மிகவும் இரசித்தேன். பதினாறு தடவைகள் மீட்டல் பெற்ற திரைக்கதை என்பதாக அறிகிறேன். அதிற் பெரும்பான்மை பாத்திர உருவாக்கத்துக்காகவே செலவழிந்திருப்பது கண்கூடு. பெரும்பாலான பாத்திரங்களின் status quo க்கள் தெள்ளத் தெளிவாக மாறும் விதத்தில் திரைக்கதை மினக்கெட்டுச் செதுக்கப்பட்டிருக்கிறது. ‘செதுக்கப்படுதல்’ என்பதான சொற்பிரயோகம் இப்போது அதிகளவில் அடிபட்டாலும் நான் தெளிவாகத் தெரிந்து எடுத்து இவ்விடத்தில் பொருத்தப்பாட்டுடனே பயன்படுத்துகிறேன். பாத்திரங்கள் பிறரோடு முரண்படுகிறார்கள், சிலர் சமூகத்தோடு முட்டிக் கொள்ளுகிறார்கள், இன்னுஞ் சிலர் சுயத்தோடு போராடுகிறார்கள், தேடுகிறார்கள். உயரத்தில் ஆரம்பிப்பவர்கள் விழுகிறார்கள், எச்சிப் பாத்திரம் துடைப்பவர்கள் இரும்பனாகிறார்கள், அழுது கொண்டிருப்பவர்கள் அரக்கராய் மாறுகிறார்கள், சுதந்திரப் பட்சிகள் சிக்கித் தொலைக்கிறார்கள், தொலைந்தவர்கள் தம் தேடலுக்கு விடை பெறுகிறார்கள், அடிமட்டத்தில் ஆரம்பிப்பவர்கள் எழுகிறார்கள், சிந்தனையில் சிக்கியவர்கள் தெளிவடைகிறார்கள், self discovery நிகழ்த்துகிறார்கள், ஒரு சிலர் அமைதி காணுகிறார்கள். இப்போது பொறுமையாக உட்கார்ந்து நான் யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு பிரதான பாத்திரமும் இவ்வகை dramatic changes இல் திளைத்திருக்கிறார் என்பது புலப்படுகிறது. அருமை! குணாதிசயங்கள் தவிரவும் பாத்திரங்களை நினைவில் நிறுத்தும் வேறுபட்ட உத்திகளையும் இனங் காண்கின்றேன். பியானோ, தொப்பி (செந்தில்), டாட்டூ, துப்பாக்கியின் hawk sticker, சோடா புட்டிக் கண்ணாடி போன்றனவும், வேறுபட்ட POV இலான காட்சிகளும் பாத்திரங்களின் தனித்துவங்கள், அறிமுகங்களைத் தாங்கி, இத் திரைக்கதைத் துண்டுகளின் ஒட்டுப் பசைகளாயிருந்தன. படத்தின் பிற்பகுதிக் காட்சி ஒன்றில், இரும்பன் “வீக்கான பெடியளாப் பிடிச்சு விசாரிப்பம்” என்பதாகச் சொல்லும் இடத்தில், அந்தப் ‘பெடியன்’ இவ்வளவு நேரமும் திரையில் செய்து வந்தவை எல்லாமுமே அவ் வீக்’ஆன மனநிலையின் விளைவுகளே என்கிற அந்த உண்மை, நினைவலைகளினூடு நொடிப் பொழுதில் நீந்தி வந்து நெற்றிப் பொட்டில் அறையும் போது, ”எட ஓமென!” என்பதாய் அந்தப் ‘பெடியன்’ பாத்திரத்துடன் சேர்ந்து நானும் துணுக்குற்ற கணத்தை மெச்சுகிறேன். படம் பார்க்கும் பொழுதிலும், பிறகும் இவ்வாறான நிறைய நிறைய முடிச்சுக்கள் அவிழ்ந்திருக்கின்றன, அவிழ்ந்த வண்ணமிருக்கின்றன. இது மிக அழகான அனுபவமாயிருக்கிறது. முதற் பகுதியில் சொல்லியிருந்தது போல் நிறையக் காட்சிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உபயோகங்களிருக்கின்றன. இன்னுஞ் சொல்லப் போனால் வெறுமனே கதைகளைத் தொடர்பு படுத்துவதோடு அவை ஓய்ந்து விட்டிருக்கவில்லை. பிரதானமாக ஒரிரு கேள்விகளுக்கான விடைகளைத் திரைப்படம் தேடிச் செல்லுக்கையில் அவ் வகையான பல்லுபயோகக் காட்சிகள் ஏராள கிளைக் கேள்விகளை எமை நோக்கி எறிகின்றன. நிறையச் சிந்திப்பதற்கு இடமிருக்கிறது என்பதால் எந்த மட்டத்திலான intellectual க்கும் A Gun and a Ring தீனி போடுகிறது.
 
4. Title இன் போதான பாடல் ஒட்டுமொத்தமாய்ப் பிடித்திருக்கிறது. எனக்கு இசையினைப் பற்றிய ஞானமில்லை. துருத்திக் கொண்டு குழப்பவே இல்லை என்பதால் அதுவும் நன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும். 5. நிறையவே இருக்கும் பிரதான பாத்திரங்களுக்கு உயிரூட்டி என் மண்டைக்குள் அவர்களுக்கு மைதானம் அமைத்தவர்களைத் தனித்தனியே பாராட்ட, சினமாவின் ஏனைய பிரிவுகளை ஒவ்வொன்றாய்ச் சீர்தூக்கத் தனிப்பதிவு தேவை என்பதால் அவற்றைத் தவிர்க்கிறேன். தவிர எல்லாப் பிரிவுகளிலும் எனக்குப் பரிச்சயமுங் கிடையாது. எமக்குப் பரிச்சயமான ஏனைய Cinema Industry களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் குறைவாய்த் தென்படும் ஆளணி, ஏனைய வளங்களிலிருந்து உருப்பெற்று, ஒரு சிக்கலான script work இனைச் சாத்தியமாக்கியிருக்கும், ஒட்டு மொத்த படக் குழுவினரின் உழைப்பையும் அவர்தம் உந்துதலையும் மெச்சுகிறேன். வாழ்த்துக்கள். கொஞ்சங் கேள்விகள் பொதுவாகத் திரைப்பட விமர்சனங்களில் இரண்டு main streams இருக்கின்றன. அத் திரைப்படம், 1. ‘எதைப் பேசுகிறது?’ 2. ‘எப்படிப் பேசுகிறது?’ இரண்டுமே முக்கியந்தான். சிலருக்கு 1 இல் மேலதிக கவனமிருக்கும், சிலருக்கு அது 2 இலிருக்கும். எனக்கு 2. நான் படம் செய்யும் போது ’எதை’இனைப் பார்த்துக் கொள்ளுவேன். இப்போது எனது ஆர்வமெல்லாம் ‘இவர்கள் எப்படிச் செய்கிறார்கள்?’ என்பதிலேதானிருக்கிறது. இதுதான் என்னுடைய ‘அரசியல் நிலைப்பாடு’! இப் பதிவு இது வரைக்கும் ‘எப்படி?’ என்பதில் காலூன்றி நின்றிருந்தாலும் முழுமை கருதி ‘எதை’ப் பகுதியிலும் தன் சுட்டு விரல் கொண்டு ஓரளவுக்கேனும் சுரண்டிப் பார்க்க விளைகிறது. இத் திரைப்படத்தின் அரசியல் நிலைப்பாடுதான் என்ன? Title song, இயக்கங்கள், சகோதரப் படுகொலை, சூடான் ’ஒப்பீடு’, பூசா, நான்காம் மாடி, வெள்ளை வான் என்பதான பல வெளிப்படையானதும் நுணுக்கமானதுமான ’ஆவணப் படுத்தல்களும்’, பாதுகாப்பு, பிள்ளை வளர்ப்பு, தலைமுறை இடைவெளி, சுதந்திரம், உறவு போன்றனவற்றின் notion குறித்த சிந்தனைத் தூண்டல்களும் நிறையவே தூவப்பட்டிருக்கின்றன. நன்று! இருந்தாலும், வெளிப்படையான அல்லது நேரடியான எதுவித அரசியல் நிலைப்பாட்டையும் திரைப்படம் கொண்டிருக்கவில்லை. பெரும்பாலும் சுட்டுதல்களெல்லாம் abstract ஆகவே இருந்தன. மறைமுக அல்லது குறியீட்டு நிலையிலாவது ஏதேனும் தென்படுகிறதா என்று தேடிக் கொண்டே இருந்தேன், கடைசி வரைக்கும் கிட்டவில்லை. நான் தவற விட்டிருக்காத பட்சத்தில், அந்த ‘அரசியல் நிலைப்பாடு’ தனிப்பட்ட பார்வைக் கோணத்துக்கே விடப்பட்டிருக்கிறது போலும். அல்லது தணிக்கை, எடுத்துக் கொண்ட scope, ‘எனி என்ன என்பதுவே முக்கியம்’ போன்ற ஏதேனும் ஒரு காரணங் கருதி அவ்வாறமைந்திருக்கலாம். Main theme மழுங்கடிக்கப் பட்டிருப்பது நல்லதல்ல. திட்டுத் திட்டாய் வார்த்தைகளை மட்டும் விட்டு, வாக்கியம் எதையும் அமைக்காது, ‘எதையெண்டாலும் எடுத்துக் கொள்ளு’ என்பதாய் ’எஸ்கேப்’ ஆகி விடும் வழமையான ’திரைத்துறை’ அரசியலாய் இருந்திடக் கூடாது என விரும்புகிறேன். திருஷ்டிப் பொட்டுக்கள் 1. ஒரு சில Frames. அவை Unconventional frames ஆக அமைந்திருந்தாலும் அந்தந்த context க்கு எந்தளவுக்குச் சரியாக இருந்தது என்பதில் கொஞ்சம் குழம்பிப் போனேன். சில இடங்களில் கண்டிப்பாக இன்னுமும் சுவாரசிய frames வைக்கப்பட்டிருக்கலாம். 2. இந்தப் படத்தினைப் பார்வையிடும் போது Pulp fiction ஞாபகத்துக்கு வந்து தொலைப்பதைத் தவிர்க்க முடியவில்லை. கதையினைப் பொறுத்தவரையில் அது ஒரு அநாவசிய ஒப்பீடாகத் தெரிந்தாலும், பிணைந்த கதைகளின் கூட்டுத் திரைக்கதை என்கிற ரீதியில் ஏற்றுக் கொள்ளப்படத் தக்கதே (என்றெண்ணுகின்றேன்). அந்த ஒப்பீட்டின் பிரகாரம், ஒரு சில ’பாதிப்பு’ வித்தியாசங்கள் பின்வருமாறு. Gun and a Ring படத்தில் ஏராளமான விசயங்கள், பாத்திரங்கள் வந்து போகின்றன. கொஞ்சம் கனதியாகவே இருக்கிறது. பார்த்து முடித்த கையோடு ஒருவித களைத்துப் போனவுணர்வு மிருதுவாக (மூளைப் பகுதியினை) நீவுகிறது. ஒன்றுக்கொன்று வேறுபட்ட குணாம்சங்கள், நோக்கங்களுடையதும் முக்கியமானதாயும் பல பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. ஆயினும் அவ்வாறான சில பாத்திரங்களின் நிலை இறுதியில் தொக்கு நிற்கிறது. அத்துடன் ஒரே தடவையில் படத்தினை உள்வாங்குவதற்கான ஒரு சராசரிப் பார்வையாளனின் சாத்தியக் கூறுகள் குறைவானவை. காரணம் இலகுவானது. Good ஐயும் bad ஐயும் பிரித்தறிதல் சுலபம். better ஐ அறிதல்தான் கஷ்டமானது. பார்வையாளர் தனக்குரிய பிரதான செய்தியை (விரும்பின்) அவரே கொள்வார் என்பது சரிதான். இருப்பினும் ஏராளமான ‘செய்திகள்’ அல்லது அதற்கான potential இருப்பது சில நேரங்களில் முக்கியமான கவன ஈர்ப்பொன்றினை நீர்த்துப் போகச் செய்திடலாம். அதாவது எக்கச்சக்கமாக இருந்தால் எதையுமே கொள்ளாமல் விடும் குணம் பார்வையாளனுக்கு அமைந்து விடும் வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்துக்கு, படத்தின் இறுதிக் காட்சியினை விடவும் இறுதிக்கு முன்னதான காட்சி மிகவும் வலுவானது. இரண்டு காட்சிகளிலும் தலா இரண்டு மாந்தர்களின் realization, ஒப்புக் கொடுத்தல், அமைதியடைதல் என்பன நிகழ்கின்றன. இறுதிக் காட்சியினை விடவும் (இது சற்று இயந்திரத் தனமாகவும், கொஞ்சம் ஒவ்வாமலும் இருந்தது) அதற்கு முந்திய காட்சியில் எமது emotional journey’க்கு அதிக அழுத்தமான, உணர்வு பூர்வமான முடிவு கிடைக்கிறது. இறுதிக் காட்சியில் வெறுமனே ஆசுவாசப் படுத்திக் கொள்ளுகிறோம். இந்த உதாரணம் அகவயமானதாய் (subjective) அமைந்திடும் வாய்ப்புக் குறைவு. ஏனெனில் இரு வேறுபட்ட ’குற்றவாளிகளின்’ (உண்மையில் இருவரும் அச் சிறுமியின் பாதுகாவலர்களாயிருக்க வேண்டியவர்கள்) சந்திப்பு, ’மன்னிப்பு’ போன்ற மேலதிக உணர்வு உச்சங்களோடு இறுதிக்கு முன்னரான அக் காட்சி மிகுந்த கனமாயிருக்கிறது. தாராளமாய்க் கொட்டிக் கிடக்கும் (கேள்வி எழுப்பும், பதில் சொல்லும்) கனமான காட்சிகளால் இந்தப் penultimate scene இன் nuance இலான கவனிப்புக் கொஞ்சம் குறைந்து போக வாய்ப்பிருக்கிறது, அதுதான் பிரச்சினை. அடுத்த விசயம், ஒட்டுமொத்தமாக நோக்கின், காட்சிகளின் வீரியம் சற்றுப் போதாமலிருக்கிறது. வசனங்கள், நடிகர்கள், shots (frames) இன் கூட்டு வீரியக் குறைவுதான் காரணமோ தெரியவில்லை. எதற்கும் நான் இன்னொரு தரம் பார்க்க வேண்டும். எப்போது? Tarantino படங்களில் scene களில் அழுத்தமான status quo மாற்றமிருக்கும். அது மிரட்டலானதாகவும் மிகுந்த ஈர்ப்புடையதாகவுமிருக்கும். ஆனால் அதற்கான அவரது தலையாய வழிமுறை, வன்முறை. வன்முறை, கொடூரங்களை மிகுந்த ஸ்டைலிஷ் ஆக, இரசிக்கத் தக்க விதத்தில் படமாக்குவதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அதைப் பார்த்துவிட்டு ஆரும் போய்ச் செய்வார்கள் என்பதற்காக அல்ல; உண்மைக்குப் புறம்பான அழகியல் உணர்ச்சிகளை விதைப்பது அந்த உண்மையான பிரச்சினையின் தீவிரத்தையும், தீர்வின் அவசரத்தையும், உணர்வுக் காயங்களையும் மழுங்கடிக்கும், மறைக்கும், முலாம் பூசி மினுக்கும் என்பதற்காக. A Gun & a Ring’இலான வன்முறை ஒப்பீட்டளவில் குறைவு. ஆயினும் அதுவே அதிகம் என்பதாய்ச் சிலர் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். அவ் வன்முறைக் காட்சிகளும் கூற்றுக்களும், போரின் போதான பயங்கரங்களையும் ( கூற்றுக்கள் வாயிலாக), போர் பிரசவிக்கும் மரத்துப் போன மனிதர்களையும், வெளிப்படையான போர் மட்டுமல்லாது சமுதாய இறுக்கங்களும், இடைவெளிகளுங் கூட வன்முறையின் தோற்றுவாய்களாகிடலாம் என்பதையும், தெள்ளத் தெளிவாக வெளிக்காட்டி நிற்பதால் அக் காட்சிகளை நான் ஆதரிக்கிறேன். அதிர்வலைகளைப் பிறப்பிக்கத்தக்க அதே சமயம் இயல்பான, வக்கிர, வன்முறை மனோபாவங்கள் ஆங்காங்கே உரித்துப் பார்க்கப் பட்டிருப்பதோடு அக் குணங்களின் தோற்றத்துக்கான காரணிகளும் போதுமான அளவுக்கு வெளிச்சம் பாய்ச்சப் பட்டிருக்கின்றன. அவை disturbing ஆயிருப்பது சரியானதே. நான் இப்போது ஒப்பீட்டுக்காய் உபயோகித்திருப்பது உலக சினமாவில் உறுதியான ஒரு இடத்தினை அகப்படுத்திய படைப்பு என்பதால் ஒப்பீட்டிலோ அது தரும் முடிவிலோ எதுவிதத் தாழ்வும் இல்லை. ஒரு திரைத்துறை மாணாக்கனாக நல்ல திரைப்படங்களைக் காணக் கிடைக்கையில் ஆனந்திக்கிறேன். அதுவே இன்னுமும் நெருக்கமானதொரு வளத்திலிருந்து விளைந்திருப்பதை நினைவு படுத்திக் கொள்ளுகையில் அவ்வின்பம் அதிசயிக்கத்தக்க வகையில் அதிகமாகிறது. நல்ல அனுபவத்துக்கு நன்றி, ‘A Gun & a Ring’ படக்குழு! எனது படிப்பினை அரசியல், தனிமனித வாழ்வியல் எல்லாவற்றையுந் தாண்டி, தனிப்பட்ட முறையில் எனக்கு இந்தப் படம் புகட்டும் பாடமானது, ஒரு திரைப்பட முயற்சியில் திரைக்கதைக்கான உழைப்பு எப்படியானதாய் இருக்க வேண்டும் என்பதுவே. அதனால் இரண்டு முடிவுகள் எடுத்திருக்கிறேன். 1. எனி நான் பங்கெடுக்கும் திரைப்படங்கள் (இப்போதைக்குக் குறுந்திரைப்படங்கள்) வெளியிடப் படுகையில் அதன் திரைக்கதையும் சமர்ப்பிக்கப் படுவதை உறுதிப்படுத்துவேன். 2.‘ஈழத்துத் திரைப்பட முயற்சிகளைச்’ சரியான திசையில் செலுத்த இவ் ‘வேலைத்திட்டம்’ கண்டிப்பாக உதவும் என்பதால் என் போன்ற ஏனைய முயற்சியாளர்களுக்கும் இவ் வழிவகையினைப் பரிந்துரைக்கிறேன். எனக்குத் தெரிந்து இதை விட best instant approach வேறெதுவுமில்லை. அண்மையில் ‘மாசிலன்’ இவ்வாறு அமைந்திருந்தது. முயற்சிகளின் ’சிறு பிள்ளைத்தனம்’ குறித்து அலுத்துக் கொள்பவர்கள் மட்டுமல்லாது இம் முயற்சிகளை ஊக்குவிக்க விளைபவர்களும் கண்டிப்பாக இதை அமுல் படுத்த வேண்டுகிறேன்; அல்லாதவற்றைப் புறக்கணிக்கவும் வேண்டுகிறேன். இந்த ஏற்பாட்டில் கன்னி முயற்சியாளருக்கும், கனக்க எடுத்தவருக்கும் பேதமுமில்லை; பொருட் சேதமுமில்லை; ஒரு பிழையுமில்லை; இவ்வணுகுமுறையற்ற முன்னேற்றம் சாத்தியமேயில்லை.